Published : 04 Apr 2022 04:27 PM
Last Updated : 04 Apr 2022 04:27 PM
மதுரை: பத்து மாதங்களுக்கு முன்பு மாயமான நெல்லை வீரரை கண்டுபிடிக்கும் விவகாரத்தில் எல்லை பாதுகாப்பு படைக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லையைச் சேர்ந்த சுதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் ரமேஷ் (38). எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் மேற்குவங்க மாநிலம் ஜல்பைசூரியில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்தார். என் கணவர் 60 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து 28.08.2021-ல் ரயிலில் பணிக்கு புறப்பட்டார். 30.08.2021-ல் சீல்டா ரயில் நிலையம் சென்றடைந்ததாக என் கணவர் தெரிவித்தார். அதன் பிறகு என் கணவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது என் கணவர் பணியில் சேரவில்லை என்றனர். பழவூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தேன். போலீஸாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் கணவரை கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய எல்லை பாதுகாப்புப் படை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து நீதிபதிகள், "எல்லை பாதுகாப்பு படை வீரர் தலைமறைவாகிவிட்டதாக அறிவித்துவிடலாமா? இந்த வழக்கை எவ்வளவு காலம் நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பினர்.
பின்னர், "எல்லை பாதுகாப்பு படையினர் உரிய பதிலளிக்க வேண்டும். தவறினால் எல்லை பாதுகாப்பு படை கமாண்டெண்ட் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியது வரும்?" என எச்சரித்து விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT