Published : 04 Apr 2022 09:36 AM
Last Updated : 04 Apr 2022 09:36 AM

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

டி.ஆர்.பாலு | கோப்புப் படம்.

புதுடெல்லி: கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறும் தமிழக ஆளுநர் குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி கோரி திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது. டி.ஆர்.பாலு இந்த நோட்டீஸை மக்களவை துணை சபாநாயகரிடம் கொடுத்தார்.

நீட் சட்ட மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார் என்று அந்த நோட்டீஸில் டி.ஆர்.பாலு குறிப்பிட்டு இருக்கிறார். அவர் தனது அரசியல் சாசனப் பதவியின் பொறுப்பிலிருந்தும் கடமையிலிருந்தும் விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீட் மசோதாவும், ஆளுநரும்.. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாவை, தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எதிராக இருப்பதால் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதே சட்ட மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஒருமாத காலமாகியும் அதில் எவ்வித நடவடிக்கையும் ஆளுநர் எடுக்காத நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து நீட் மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், மீண்டும் ஆளுநர் அதே நிலையைத் தொடர்வதால், ஆளுநர் ரவி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கோரி திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் கொடுத்துள்ளார். மக்களவை துணை சபாநாயகரிடம் அவர் இந்த நோட்டீஸை வழங்கியுள்ளார்.

முன்னதாக, திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியில் ஆளுநர் ரவி குறித்து காட்டமாக கட்டுரை வெளியானது. அது பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளுநரின் செயல்களைத் தான் திமுக எதிர்க்கிறதே தவிர ஆர்.என்.ரவி என்ற தனிநபரை எதிர்க்கவில்லை என்று அரசு சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x