Last Updated : 22 Jun, 2014 11:11 AM

 

Published : 22 Jun 2014 11:11 AM
Last Updated : 22 Jun 2014 11:11 AM

சீனாவுக்கு செல்லும் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்முயற்சியில் தைவான் நாட்டின் மாபெரும் கவிஞரும், சர்வதேச விருதுகள் பெற்றவருமான கவிஞர் யூ ஷி-யின் சீன மொழிபெயர்ப்பில் திருக்குறள், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பாடல்கள் விரைவில் வெளிவரவுள்ளன.

தமிழின் மிகத் தொன்மையான நீதி இலக்கியமான திருவள்ளுவரின் திருக்குறள், தேசியக் கவியான பாரதியார் மற்றும் தமிழ்த் தேசியக் கவியான பாரதிதாசன் ஆகியோரின் பாடல்களை, உலகின் அதிகமான மக்களால் பேசப்படுவதும், செம்மொழியும், செழுமையான இலக்கிய வளம் கொண்டதுமான சீன (மாண்டரின்) மொழியில் மொழிபெயர்க்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.77.70 லட்சம் நிதி ஒதுக்கி, இப்பணியை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழியாக செயல்படுத்த 2012-ல் உத்தரவிட்டார்.

“இந்த சீன மொழிபெயர்ப்புப் பணி, முன்பு சீன நாட்டின் அங்க மாக இருந்த தற்போதைய தைவான் நாட்டின் புகழ்பெற்ற கவிஞரான யூ ஷி-யிடம் 2012 டிசம்பரில் ஒப்படைக்கப்பட்டது. யூ ஷி ஒரே ஆண்டுக்குள்ளாக திருக்குறளையும், பாரதியார் பாடல்களையும் சீன மொழியில் எழுதித் தந்ததையடுத்து, தற்போது சீன மொழி திருக்குறள் நூல் அச்சுப் பணி முடிவடையும் நிலையிலும், சீன மொழி பாரதியார் நூல் தட்டச்சுப் பணியிலும் உள்ளன. பாரதிதாசன் நூல் யூ ஷி-யின் மொழிபெயர்ப்பு பணியில் உள்ளது. நிகழாண்டு இறுதிக்குள்ளாக இவை நூலாக வெளியிடப்பட்டு விற் பனைக்கு வரும் வாய்ப்பு உள்ளது” என்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை.

மேலும் அவர் கூறியது: “கடந்த 2012 டிசம்பரில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள் மற்றும் நான் உள்பட தைவான் சென்று, கவிஞர் யூ ஷி-யை சந்தித்து, தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை ஒப்படைத்தோம். அவரிடம் தமிழறிஞர்கள் பி.சுப்பிரமணியம், ஜி.யு.போப் எழுதிய திருக்குறள் நூல்கள் இருந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டோம். இப்பணியை ஆர்வமுடன் ஏற்றுக்கொண்ட யூ ஷி, ஓராண்டுக்குள்ளாகவே திருக்குறள், பாரதியார் பாடல்களை முடித்து அளித்துவிட்டார். பாரதிதாசன் பாடல்களை விரைவில் அளிக்கவுள்ளார்.

வேற்று மொழி இலக்கணத்துக்கு முரண்பாடில்லாத, கடினமில்லாத, ஆனால் தமிழின் சிறப்புகள், விடுதலை வேட்கை, உலகளாவிய சமூகப் பார்வை கொண்ட 100 பாடல்களை பாரதியின் பாடல்களில் ஆழ்ந்த புலமை கொண்ட டி.என்.ராமச்சந்திரன், தமிழறிஞர்கள் ஏ.தட்சிணாமூர்த்தி, சோ.ந.கந்தசாமி ஆகியோரைக் கொண்ட குழுவினர் தேர்வு செய்தனர். இந்த பாடல்களுக்கான டி.என்.ராமச்சந்திரனின் ஆங்கில மொழிபெயர்ப்பினை சிறந்ததாகத் தேர்வு செய்தோம்.

இதேபோல பாரதிதாசனின் தமிழ் மொழி உணர்வு, சமூகம், பெண்கள் முன்னேற்றம் குறித்த சிறப்பான 100 பாடல்களை கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், கவிஞர் பொன்னடியான் ஆகியோரைக் கொண்ட குழுவினர் தேர்வு செய்து, அதற்கான ஏ.தட்சிணாமூர்த்தியின் ஆங்கில மொழிபெயர்ப்பு தேர்வு செய்யப்பட்டு யூ ஷி-யிடம் அளிக்கப்பட்டது” என திருமலை கூறினார்.

இந்த தமிழ் இலக்கியங்கள் குறித்து யூ ஷி என்ன கருத்து கொண் டுள்ளார் என்று திருமலையிடம் கேட்டபோது, “உலகம் மேன்மை அடையத் தேவையான உயர்ந்த சிந்தனைகளைக் கொண்ட இலக்கியம் திருக்குறள். அதனை மொழிபெயர்க்கும் பணியை எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்” என அவர் உணர்ச்சி மேலிடக் கூறியது பசுமையாக நினைவில் உள்ளது” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x