Published : 03 Apr 2022 04:00 AM
Last Updated : 03 Apr 2022 04:00 AM

பிரசவத்தின்போது கர்ப்பிணி இறந்ததால் கொலை வழக்குப்பதிவு: பெண் மருத்துவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐஎம்ஏ வலியுறுத்தல்

ராஜஸ்தானில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவரின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு காளைமாடு சிலை அருகில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

ராஜஸ்தானில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்திய மருத்துவ சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். ஆனால், அதிக ரத்தப் போக்கு காரணமாக கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து ராஜஸ்தான் போலீஸார் பெண் மருத்துவர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இதில் மனவேதனையடைந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தர்ணா போராட்டமும் நடைபெற்று வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஈரோடு காளைமாடு சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் சி.என். ராஜா தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் அப்துல் ஹாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் விஜயகுமார் உட்பட நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்று பெண் மருத்துவர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் சி.என்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராஜஸ்தானில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் அதிக ரத்தப்போக்கு காரணமாக இறந்துவிட்டார். இதற்கு அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் மருத்துவர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

இதனால் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர எழுதிய கடிதத்தில், மருத்துவராக நான் எனது கடமையை சரியாக தான் செய்திருந்தேன். இருந்தாலும் நான் தற்கொலை செய்து கொள்கிறேன், இந்த முடிவு வேறு எந்த மருத்துவருக்கும் வரவேண்டாம். என் இறப்புக்கு பின்னால் எனது குழந்தைகளையும், கணவரையும் தொந்தரவு செய்யாதீர்கள், என்று எழுதியுள்ளார்.

பிரசவத்தின் போது சில சமயம் அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்படுகிறது. 2013-ம் ஆண்டு பிரசவ இறப்பு 250 ஆக இருந்தது. தற்போது 113 ஆக குறைந்துள்ளது. பெண் மருத்துவர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பிரதமரை சந்திக்க உள்ளோம்.

இதேபோல் அந்தந்த மாநில முதல்வர்களையும் சந்தித்து, மருத்துவமனை பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படும். இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களில் இந்த சட்டம் இருந்தாலும் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் அவ்வப்போது மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் மருத்துவமனையை தாக்கும் சம்பவம் நடக்கிறது, என்றார்.

250 மருத்துவமனைகள் அடைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில், 250 தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையை தவிர்த்து மருத்துவமனைகளை மூடினர். மேலும் தங்களது மருத்துவமனை முன்பு, மருத்துவர் மீது தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸாரை கைது செய்ய வேண்டும். மருத்துவர் அர்ச்சனா குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். மருத்துவர்களை குற்றவாளிகளாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து இந்திய மருத்துவத்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x