Published : 03 Apr 2022 04:15 AM
Last Updated : 03 Apr 2022 04:15 AM

திருச்சி | ஒவ்வாமை சந்தேகத்தில் சிகிச்சைக்கு சேர்த்த பெற்றோர்: பாம்பு கடி என உறுதி செய்து சிறுமியின் உயிரை போராடிக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

அரசு மருத்துவக் குழுவினரின் சிகிச்சையால் குணமடைந்த சிறுமியிடம் நலம் விசாரித்த டீன் வனிதா. உடன், மருத்துவக் குழுவினர்.

திருச்சி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி சஞ்சனா (8), கடந்த மார்ச் 21-ம் தேதி பள்ளியில் வழங்கப்பட்ட குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு உள்ளார். அன்றிரவு பெற்றோருடன் வீட்டுக்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்த சஞ்சனாவுக்கு வயிற்று வலி, தொண்டை வலி, பார்வை குறைபாடு, மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

மாத்திரை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையாக(அலர்ஜி) இருக்கலாம் எனக்கருதிய பெற்றோர், அவரை மறுநாள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த குழந்தைகள் நல மருத்துவர்கள் குழுவினர், சிறுமி கூறிய அறிகுறிகளை வைத்து, வீட்டுக்கு வெளியில் தூங்கியதால் பாம்பு கடித்திருக்கலாம் என சந்தேகித்தனர்.

கட்டுவிரியன் பாம்பு கடித்தால், கடித்ததற்காக அடையாளம் எதுவும் இருக்காது. மேலும், கண்களை முழுமையாக திறக்க இயலாமை, மூளை நரம்பு மண்டல பாதிப்பு ஆகிய அறிகுறிகள் இருந்ததால், அவரை கட்டுவிரியன் பாம்புதான் கடித்து இருக்கும் என மருத்துவக் குழுவினர் உறுதி செய்தனர்.

இதையடுத்து குழந்தைகள் நல மருத்துவத் துறை தலைவர் டாக்டர் சிராஜூதீன் நசீர், இணை பேராசிரியர் டாக்டர் சி.எஸ்.செந்தில்குமார், குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பு டாக்டர் ஜி.எஸ்.வைரமுத்து, குழந்தை நல மருத்துவர்கள் எஸ்.கார்த்திகேயன், பி.சிவபிரசாத், மூளை நரம்பியல் மருத்துவர் எம்.ராஜசேகர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அச்சிறுமிக்கு சிகிச்சை அளித்து, சிறுமியின் உயிரை காப்பாற்றினர்.

அதன்பின் கடந்த 11 நாட்கள் மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு அச்சிறுமி பூரண குணமடைந்தார். மருத்துவமனை முதல்வர் டாக்டர் கே.வனிதா அச்சிறுமியிடம் உடல் நலம் விசாரித்து, நேற்று முன்தினம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மேலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x