Published : 02 Apr 2022 10:25 PM
Last Updated : 02 Apr 2022 10:25 PM
சென்னை: தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டு சொத்து வரியை உயர்த்தி இருக்கும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஏப்ரல் 5-ல் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொழுது விடிந்து பொழுது போனால் திமுக அரசு மக்களை துன்புறுத்தும் செயல்கள் எதையேனும் செய்து கொண்டே இருக்கிறது. விடியல் அரசு என்று பெயர் சூட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த திமுக வின் இருள் சூழ்ந்த ஆட்சி மக்களின் மீது சுமைகளை ஏற்றிக்கொண்டே செல்கிறது.
எத்தனை பொருளாதார நெருக்கடிகள் வந்தபோதும் அதிமுக அரசு ஏழை, எளிய உழைக்கும் மக்களின் நலன்களை காப்பற்றவும், அவர்களை சமூகத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரவும் மேற்கொண்ட திட்டங்கள் ஏராளம். அந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு சீர்குலைத்து வருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்கள் மீண்டு வரும் வரை தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட மாட்டாது என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த திமுக, கரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பில் இருந்து மீளமுடியாமல் மக்கள் அல்லல்பட்டுக கொண்டிருக்கும் போது, 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது வாக்களித்த மக்களுக்கு செய்கிற பச்சை துரோகம்.
கரோனா பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, வருமானம் குறைவு என்று பன்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படும் நகர்புற மக்களின் தலையில் 150 சதவீதம் சொத்துவரி என்ற சம்மட்டியால் அடித்து மக்களை நிலைகுலையச் செய்கிறது திமுக அரசு. இந்த சொத்து வரி உயர்வு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டு சொத்துவரியை உயர்த்தி இருக்கும் திமுக அரசைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வினை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஏப்.5ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT