Published : 02 Apr 2022 09:55 PM
Last Updated : 02 Apr 2022 09:55 PM
சென்னை: "அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறியதால்தான் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது" என்று எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி கூறியிருப்பதற்கு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அவசரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக முடிவு எடுத்த அ.தி.மு.க. ஆட்சிக்குத் தலைமை வகித்த இன்றைய எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி, “அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறியதால்தான் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது” என்று அபாண்டப் பழி சுமத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த சட்டம் என்றாலும் வன்னியர் சமுதாயத்திற்கு அளித்த உள் இடஒதுக்கீட்டை நிலைநிறுத்திட உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அனைத்து விதமான வாதங்களையும் முன் வைத்தது மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது திராவிட முன்னேற்றக் கழக அரசு. எந்த எந்த மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள் என்பது தீர்ப்பிலேயே இடம்பெற்றுள்ளது. அதுகூட வேறு ஏதோ மயக்கத்தில் உள்ள முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கும் தெரியவில்லை,
எதிர்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமிக்கும் புரியவில்லை. எங்கள் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற நடத்திய சட்டப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் எடப்பாடி பழனிசாமியும், சண்முகமும் வன்னியர் சமுதாயத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என்பது தான் உண்மை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 77-வது பாராவில் “அரசு தவறு செய்து விட்டது” (The Govt has Committed Error) என்று சுட்டிக்காட்டியுள்ள மூன்று காரணங்களை மயக்கம் தெளிந்த பிறகு சண்முகம் படித்துப் பார்த்தால் அந்தத் தவறை இழைத்தது அ.தி.மு.க. ஆட்சி என்பதும், அந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள “அரசு” அ.தி.மு.க. அரசு என்பதும் தெரியவரும்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் இந்த “உள் இட ஒதுக்கீடு” விவாதம் நடைபெற்றது 2012-ம் வருடம். அப்போதிருந்தது ஜெயலலிதாவின் ஆட்சி. அந்த ஆணையத்தில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை கொடுத்தபோது அந்த ஆணையத்தில் உள்ள 7 உறுப்பினர்களில் (தலைவர் உள்பட) 6 பேர் எதிர்த்தார்களே, அது யாருடைய ஆட்சி? அ.தி.மு.க. ஆட்சி. அந்த 6 பேரும் என்ன சொல்லி எதிர்த்தார்கள்? “எங்களுக்குச் சாதி அடிப்படையிலான புள்ளி விவரங்களைக் கொடுக்காமல் எப்படி பரிந்துரை கொடுப்பது” என்று கேள்வி எழுப்பினார்கள். அப்போது அந்தக் கேள்விக்கு பதிலளித்து - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து உரிய தரவுகளுடன் ஒருமனதாக ஒரு பரிந்துரையைப் பெறாமல் தூங்கியது - கோட்டை விட்டது யாருடைய ஆட்சி? அ.தி.மு.க. ஆட்சிதான். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக- அவசர அவசரமாக “ஒருமனதான பரிந்துரையைப் பெறாமல் அறிக்கை பெற்றது அ.தி.மு.க. ஆட்சியா இல்லையா?
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் இந்த அறிக்கை 2012 மே 24 ல் கொடுக்கப்பட்டது. அந்தப் பரிந்துரையை 8 ஆண்டுகள் கிடப்பில் போட்டு வைத்திருந்தது யாருடைய ஆட்சி. அதுவும் அ.தி.மு.க. ஆட்சிதான். இதை இவர்களால் மறைக்க முடியுமா அல்லது “2012 முதல் 2021 பிப்ரவரி மாதம் இந்தச் சட்டம் வரும் வரை அ.தி.மு.க. ஆட்சியே நடக்கவே இல்லை” என்று வாதிடப் போகிறார்களா? தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அப்போதே முடக்கி வைத்து விட்டு, 2020-ல் மறுபடியும் திருத்தி அமைத்தது யாருடைய ஆட்சி? பழனிசாமி - சி.வி. சண்முகம் எல்லாம் “கூவத்தூரில்” பேரம் நடத்திய; கூத்து நடத்திய அதிமுக ஆட்சிதானே.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும் 8 ஆண்டு முடக்கி வைத்து விட்டு- 2021 சட்டமன்றத் தேர்தல் வந்த நேரத்தில் அரைவேக்காட்டுத்தனமாக – அவசர கோலத்தில்- அள்ளித் தெளித்து ஒரு உள் ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி- இன்றைக்கு இந்த அளவிற்கு அந்தச் சமுதாயத்தை நெருக்கடிக்கு கொண்டு வந்து நிறுத்தியது யார்? எடப்பாடி பழனிசாமிக்கு இந்த வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மனதளவில் உடன்பாடு இல்லை. அதே போல் சட்ட அமைச்சர் என்ற முறையில் வன்னியர் சமுதாய இடஒதுக்கீட்டை முறைப்படி கொண்டு வர வேண்டும் என்ற அக்கறையும் சி.வி.சண்முகத்திற்கு இருந்ததில்லை. ஆகவே வன்னியர் சமுதாயத்தின் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை போகும் அளவிற்கு அலட்சியமாகச் செயல்பட்ட இந்த இரட்டையர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
2012-லேயே “சாதி வாரியான புள்ளிவிவரங்கள் தேவை” எனப் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் - எட்டு வருடம் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருந்ததும் அதிமுக ஆட்சிதான். அதில் சட்ட அமைச்சராக இருந்தவர்தான் இப்போது “மைக்” கிடைத்தவுடன் உளறிக் கொண்டிருக்கும்சண்முகம். ஆட்சியை விட்டுப் போகின்ற நேரத்தில் – அதுவும் “ஒரு பக்கம் உள் இடஒதுக்கீடு கொடுக்க சட்டம்”- இன்னொரு பக்கம் “ஜாதி அடிப்படையில் தகவல் சேகரிக்க நீதியரசர் குலசேகரன் ஆணையம்” இரண்டையும் அமைத்துக் குழப்பியதுஎடப்பாடி பழனிசாமிதான். இந்த நீதியரசர் குலசேகரன் ஆணையத்தை 2012-ல் உடனே நியமிக்க யார் தடையாக இருந்தார்கள்- அப்போது சண்முகம் அதிமுகவில் இருந்தாரா அல்லது அந்தமான் தீவுகளில் இருந்தாரா? எடப்பாடி பழனிசாமி 2017-ல் முதல்வரானார். அன்றிலிருந்து 2020 வரை என்ன செய்து கொண்டிருந்தார்? கலெக்ஷனில் காட்டிய அக்கறையை வன்னியர் சமுதாயத்தின் இந்த இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் காட்டியிருக்கலாமே?
தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து நடத்தப்பட்ட அவசர செயற்குழுவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசும், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய பா.ம.க. வழக்கறிஞர் பாலுவும், உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் எப்படி தமிழ்நாடு அரசு - குறிப்பாக திமுகழக தலைவர் இந்த இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்திட பாடுபட்டுள்ளார்கள் என்று மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ நேற்று வரை அமைதி காத்த பழனிசாமிக்கு இன்று பொறுக்கவில்லை. பொறாமைத் தீயில் வெந்து நொந்து போய் திமுக ஆட்சி மீது பழி போடுகிறார். தனது தவறு உச்சநீதிமன்றத்தில் தோலுரிக்கப்பட்டு விட்டதே என்று திமுக மீது பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.
இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளையும் கூட வன்னியர் சமுதாய நலனைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டப் போராட்டம் நடத்தி, இந்த உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றம் தெரிவித்த 7 கருத்துக்களில் 6 கருத்துக்கள் சரியல்ல என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் இப்போது அளித்துள்ளது. அது மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் திறமையான சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. ஆனால் அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து முறையான தரவுகளுடன் பரிந்துரை பெறுவதில் நிகழ்ந்த தவறுகளும், குளறுபடிகளும், சண்முகம் போன்ற “உதவாக்கரை” சட்ட அமைச்சராக இருந்தவரின் அலட்சியமும் தேர்தலுக்காக “வேண்டா வெறுப்பாக” எடப்பாடி பழனிசாமி அளித்த இடஒதுக்கீடுமே இந்தச் சமுதாயம் வருந்தத்தக்க தீர்ப்பு வருவதற்கு காரணமாக அமைந்து விட்டது. இதுதான் உண்மை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT