Published : 02 Apr 2022 06:45 PM
Last Updated : 02 Apr 2022 06:45 PM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகேயுள்ள மலை கிராமத்தில் கோயிலுக்குச் சென்ற வேன் சுமார் 50 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்த விபத்தில் ஒரே மலைக் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலைத் தொடரின் ஒரு பகுதியில் புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு என 3 கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 20-க்கும் குக்கிராமங்கள் உள்ளன. இதில், நெல்லிவாசல் நாடு பகுதிக்கு உட்பட்ட சேம்பரை பகுதியில் மலைக்கிராம மக்களின் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு யுகாதி பண்டிகையொட்டி இன்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், பங்கேற்பதற்காக நெல்லிவாசல் நாடு கிராம ஊராட்சிக்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில் இருந்து ஒரு வேனில் 30-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டுள்ளனர். இந்த வாகனம் சேம்பரை கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் கோயில் பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. கோயிலுக்கு செல்வதற்காக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேடான மலைப்பாதையில் பகல் 12 மணியளவில் வேன் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சுமார் 50 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.
இதில், புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தரா (55), துர்கா (40), பரிமளா (12), பவித்ரா (18), செல்வி (35), மங்கை (60) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். விபத்தில் தப்பியவர்கள் மற்றவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பான தகவலின்பேரில், புதூர்நாடு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் மற்றும் திருப்பத்தூர் நகரில் இருந்து 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேம்பரை பகுதிக்கு விரைந்தன.
அதேபோல், திருப்பத்தூர் தீயணைப்பு வீரர்கள், திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயப்பிரியா (16) என்ற சிறுமி உயிரிழந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட திக்கியம்மாள் (47), சின்ன திக்கி (22), அலமேலு (12), சென்னம்மாள் (12) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 24 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜேஷ் கண்ணன், திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் உள்ளிட்டோர் விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், கூறும்போது, ‘‘இன்று பகல் 12 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மண் பாதையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தை வாகனம் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி அறிவிப்பு: இந்த விபத்து தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘‘திருப்பத்தூர் வட்டம் நெல்லிவாசல் நாடு மதுரா புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சேம்பரை கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வேன் மூலம் சென்றபோது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது. இதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா இரண்டு லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment