Published : 02 Apr 2022 05:52 PM
Last Updated : 02 Apr 2022 05:52 PM
மதுரை: மதுரை ராஜாஜி பூங்காவில் குழந்தைகளுக்கான பொழுதுப்போக்கு அசம்சங்கள் எதுவும் இல்லாததால் 5 முறை டெண்டர் விட்டும் யாரும் எடுக்க முன்வரவில்லை. மீண்டும் 6 முறை டெண்டர்விட்டும் யாரும் எடுக்க முன்வராவிட்டால் மாநகராட்சியே பூங்காவை மேம்படுத்தி நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுலா நகரான மதுரைக்கு ஆண்டுக்கு 2 கோடி வெளிநாட்டு சுற்றுலாப்பணிகள் வருகின்றனர். அவர்களை தவிர வெளிமாநில சுற்றுலாப் பயணிகள், தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலாப்பயணிகள் அதிகளவு மதுரையை சுற்றிப்பார்க்க வருகின்றனர். அதனால், மதுரையில் கடந்த காலத்தில் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், போக்குவரத்து, பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வகை சுற்றுலாத் தொழில்கள் பெரும் வளர்ச்சிப்பெற்றன. செல்போன் உடன் எடுத்து செல்ல நீடிக்கும் தடையால் வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் தற்போது மீனாட்சியம்மன் கோயில் செல்வது குறைந்துள்ளது. அதுபோல், முக்கிய பொழுதுப்போக்கு அசம்ங்கள் பராமரிப்பு இல்லாததால் மற்ற சுற்றுலாத் தலங்கள், பூங்காக்களுக்கும் உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது.
கடந்த 5 ஆண்டிற்கு முன் வரை, காந்தி மியூசியம் அருகே உள்ள ராஜாஜி பூங்காவை சுற்றிப்பார்க்க சுற்றுலாத் தலங்களுக்கு இணையாக குழந்தைகளுடன் பெற்றோர், சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருவார்கள். விடுமுறை நாட்களில் காந்தி மியூசியம் சாலையே ஸ்தம்பிக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் பூங்காவிற்கு வருவதற்கு அலைமோதும். அந்தளவுக்கு பூங்காவில் டிக்கி ரயில், பூங்கா ரயில் ரயில், சரக்கு விளையாட்டுகள், இசை நீருற்று, ராட்டினம், புல்வெளிகள் உள்ளிட்ட குழந்தைகளை கவரும் பல்வகை பொழுதுப்போக்கு அம்சங்கள் ராஜாஜி பூங்காவில் நிறைந்து இருந்தது. மேலும், பூங்காவிற்கு வரும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஐஸ்கிரீம், ஜிகர்தண்டா, பாப்கான் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகள், டீ, காபி விற்கப்படும். இந்த பூங்காவை 1995ம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி திறந்து வைத்துள்ளார். பெரியவர்களுக்கு ரூ.20, சிறவர்களுக்கு ரூ.10 வசூல் செய்யப்படுகிறது.
ஆனால், கரோனாவுக்கு பிறகு ராஜாஜி பூங்கா பராமரிப்பு இல்லாமல் போடப்பட்டது. திரும்பிய பக்கமெல்லாம் பூங்கா வளாகம் புதர் மண்டிக்கிடக்கிறது. ஒரு சில மரங்கள தவிர மற்ற மரங்கள், செடிகொடிகளுக்கு தண்ணீர் ஊற்றாததால் அவை அனைத்தும் பட்டுக்கிடக்கின்றன. டிக்கி ரயில், பூங்கா ரயில்நிலையம், ராட்டினம் போன்ற குழந்தைகளை குதூகலம் செய்யும் விளையாட்டு உபகரணங்கள் தற்போது செயல்படவில்லை. விளையாட்டு உபகரணங்கள் பெரும்பாலானவை உடைந்து கிடக்கின்றன. அவற்றை எடுத்து ஓரமாக கூட வைக்கப்படாமல் அவை அனைத்தும் மழையிலும், வெயிலிலும் பூங்கா வளாகத்தில் குப்பை மேடாக குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. பூங்கா வளாகத்தில் உள்ள பறவைகள், விலங்கினங்கள் சிற்பங்கள் உடைந்து சிதலமடைந்து உள்ளன. அதனால், ராஜாஜி பூங்காவில் தற்போது குழந்தைகளையும், பொதுமக்களையும் கவரக்கூடிய அளவிற்கு எந்த பொழுதுப்போக்கு அம்சமும் இல்லாததால் இதுவரைர 5 முறை டெண்டர்விட்டும் யாரும் எடுத்து நடத்த ஏலம் எடுக்கவில்லை. மீண்டும் 6வது முறையாக விரைவில் ஏலம் விடப்படுகிறது. தற்போது அதே நிலை ராஜாஜி பூங்காவில் தொடர்வதால் மீண்டும் டெண்டர் யாரும் எடுக்க வரமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகம் இருக்கிற இதுபோன்ற பூங்காக்களை பராமரிப்பதைவிட்டு புதிதாக பூங்காக்கள் கட்டுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ''ராஜாஜி பூங்கா எப்போதுமே தனியாருக்கு டெண்டர் விட்டு நடத்தப்படும். அந்த அடிப்படையில் தற்போது டெண்டர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டெண்டர் எடுப்பவர்கள் மாநகராட்சிக்கு டெப்பாசிட்டாக ரூ.1.25 கோடி செலுத்த வேண்டும். மேலும், பூங்காவில் பொழுதுப்போக்கு அம்சங்கள் ஏற்படுத்தி விளையாட்டு உபகரணங்களையும் சீரமைக்க வேண்டும். அதனாலே, மாநகராட்சி பூங்காவை பராமரிக்காமல் உள்ளது.
இதற்கு முன் 5 முறை டெண்டர்விட்டப்போது மீண்டும் 'கரோனா' வரும் அச்சத்திலே யாரும் டெண்டர் எடுக்கவில்லை. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த தொற்று நோய் மீண்டும் வர வாய்ப்பு இல்லை என்பது தெரிந்துள்ளதால் இந்த முறை ராஜாஜி பூங்காவை டெண்டர் எடுக்க ஏலதாரர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அப்படியும் யாரும் டெண்டர் எடுக்காவிட்டால் மாநகராட்சி சில திட்டங்களை வைத்திருக்கிறது. அதன் அடிப்படடையில் பூங்கா புதுப்பொலிவுப்படுத்தப்படும்'' என்றனர்.
மதுரையில் சினிமா தியேட்டர்களையும், மால்களையும் விட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வேறு பொழுதுப்போக்கு இல்லாததால் இந்த முறையும் யாரும் டெண்டர் எடுக்க முன்வராவிட்டால் ராஜாஜ பூங்காவை மாநகராட்சியே தன்னிச்சையாக எடுத்து நடத்தவும் அல்லது தனியாருடன் கைகோர்த்து பூங்காவையும் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment