Last Updated : 02 Apr, 2022 05:10 PM

 

Published : 02 Apr 2022 05:10 PM
Last Updated : 02 Apr 2022 05:10 PM

புதுச்சேரியில் அதிகாரிகளின் தன்னிச்சையான மின் கட்டண உயர்வு அறிவிப்பை ரத்து செய்க: ரங்கசாமியிடன் அதிமுக வலியுறுத்தல்

அன்பழகன் | கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தலைமைச் செயலர், மின்துறை செயலர் மற்றும் மின்துறை உயரதிகாரிகளின் சட்டவிரோதமான தன்னிச்சையான மின் கட்டண உயர்வு அறிவிப்பை முதல்வர் ரங்கசாமி ரத்து செய்ய வேண்டும் என கூட்டணிக் கட்சியான அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "கடந்த 1-ம் தேதி முதல் புதிய மின் கட்டண உயர்வை மின்துறை தற்போது வெளியிட்டுள்ளது. ஜனவரி 13-ம் தேதி வெளியிடப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் 100 யூனிட், 101-200 யூனிட் வரை, மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு மட்டும் கட்டண உயர்வு என அறிவித்தது.

அது சம்பந்தமாக கருத்து கூறலாம் என தெரிவித்துவிட்டு தற்போது 200-300 யூனிட், மின்சாரத்துக்கு மின் கட்டண உயர்வும், வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும் மாதம் தோறும் ரூ.30 என 10 மடங்குக்கு மேல் உயர்த்தி உள்ளது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மின் கட்டண உயர்வு சம்பந்தமாக கருத்து கேட்பு அட்டவணை அறிவிப்பில் இல்லாத மின் பயனாளிகளுக்கும் கட்டண உயர்வு என்பது சட்டத்துக்கு விரோதமான செயலாகும். கட்டண உயர்வின் மூலம் தற்போது உள்ள கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் செலுத்தும் சூழ்நிலை ஏற்படும். இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர்.

தலைமைச் செயலர், மின் துறை செயலர் மற்றும் மின் துறை உயரதிகாரிகளின் சட்டவிரோதமான தன்னிச்சையான மின் கட்டண உயர்வின் அறிவிப்பினை முதல்வர் ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வு சம்பந்தமாக ஜனவரி மாதத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படாத மின் உபயோக சம்பந்தமான அடுக்கு முறைக்கு, உயர்த்தப்பட்டுள்ள மின் உயர்வு சம்பந்தமாக மீண்டும் பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். அதுவரையில் ஒட்டு மொத்தத்தில் சட்டத்துக்கு விரோதமாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு அட்டவணையை முதல்வர் நிறுத்தி வைக்க வேண்டும்" என்று அன்பழகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x