Published : 02 Apr 2022 10:05 AM
Last Updated : 02 Apr 2022 10:05 AM
சென்னை: சொத்து வரி உயர்வு வெறும் ட்ரெய்லர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்குப் பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு, 25 சதவீதம் சொத்து வரியும் உயர்த்தப்படுகிறது. 600-க்கு மேல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 1200-க்கு மேல் முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் சொத்து வரி உயர்கிறது. 1800க்கு மேல் அதிகமான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23ம் நிதியாண்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சொத்து வரி உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்புத் தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியா அரசு தற்போது நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது, இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரெய்லர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன" என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT