Published : 02 Apr 2022 06:53 AM
Last Updated : 02 Apr 2022 06:53 AM

யுகாதி பண்டிகையையொட்டி குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை

யுகாதி பண்டிகையையொட்டி குந்தாரப்பள்ளி சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. படம்: எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: யுகாதி பண்டிகையையொட்டி, குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இன்று (2-ம் தேதி) தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதற்காக நேற்று கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. ஆடுகள் வாங்கவும், விற்பனை செய்யவும், உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

இதேபோல், வேலூர், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி போன்ற மாவட்டத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் குவிந்தனர். இதனால் ஆடு விலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. ஆடுகளை, வாங்கவும், விற்பனை செய்யவும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், வியா பாரிகள் சந்தையில் குவிந்தனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறும்போது, கரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக யுகாதி பண்டிகையின்போது ஆடுகள் விற்பனை குறைவாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது, யுகாதி பண்டிகை மற்றும் அரியக்கா, பெரியக்கா கோயில் திருவிழா உள்ளிட்டவையால் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. 10 கிலோ எடைக் கொண்ட ஆடு ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையானது. வழக்கத்தைவிட ரூ.3 ஆயிரம் கூடுதலாக விற்பனையானது. சுமார் 10 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனையாகி இருக்கும். இதன் மூலம் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது என்றனர்.

ஆடுகள் விலை உயர்வால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். குந்தாரப்பள்ளி சந்தையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் அன்புமணி, எஸ்ஐ காணிக்கைசாமி மற்றும் போலீஸார் சீர் செய்தனர். இதேபோல், சூளகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று நடைபெற்ற சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x