Published : 02 Apr 2022 08:47 AM
Last Updated : 02 Apr 2022 08:47 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த சாலுவான் குப்பம் புலிக்குகை சிற்ப வளாகத்தில் பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி, அலங்காரம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பாரம்பரிய சிற்பங்கள் சேதமடையும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கை மாவட்டம், மாமல்லபுரத்தில்ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜுனன் தபசு, சாலுவான் குப்பம் புலிக்குகை உள்ளிட்ட பல்லவர் கால குடவரைசிற்பங்கள் உள்ளன. இச் சிற்பங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால், தொல்லியல் துறை பாதுகாத்துப் பராமரித்து வருகிறது.
இவற்றைப் பராமரித்து வரும் தொல்லியல் துறை இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவித்துள்ளது. மேலும், சிற்பங்களின் பாதுகாப்புக்காகச் சிற்ப வளாகங்களில் நவீன இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இந்நிலையில், சாலுவான் குப்பம் பகுதியில் அமைந்துள்ள புலிக்குகை சிற்ப வளாகத்தில் தொல்லியல் துறை சார்பில் அலங்காரம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காகப் புலிக்குகை சிற்பத்தின் மிக அருகில் அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், பாரம்பரிய புலிக்குகை சிற்பம் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறியதாவது: பாதுகாக்கப்பட்ட இப்பகுதிகளில் மனித உழைப்பின் மூலம் தளவாடங்களைப் பயன்படுத்தி மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது. அகழ்வாராய்ச்சி பணிகளிலும், இந்த விதிகளைப் பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், குடவரை சிற்பமாக விளங்கும் புலிக்குகை மற்றும் சுனாமியின் மூலம் கண்டறியப்பட்ட முருகன் கோயில்அருகே அலங்காரப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறி, சிற்பங்களுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகளைச் செய்து வருவது மிகுந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் இந்தச் சிற்ப வளாகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
மேற்கண்ட பணிகள் குறித்து, தொல்லியல் துறை அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT