Published : 01 Apr 2022 10:30 PM
Last Updated : 01 Apr 2022 10:30 PM
புதுடெல்லி: "இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகியனவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் நம் தனிப்பட்ட அரசியல் மனநிலையை விலக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையே பலம் என்பதை உணர வேண்டும்.பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், இடதுசாரிகளுடன் அனைத்து மாநிலக் கட்சிகளுமே கைகோக்க வேண்டும்" என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். இரண்டாம் நாளான இன்று (ஏப்.1) டெல்லி மாடல் பள்ளிகளைப் பார்வையிட்டார். நாளை (ஏப்.2) டெல்லியில் திமுக கட்சி அலுவலகம் திறப்புவிழாவிற்கு தலைமை தாங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில் பாஜகவை வீழ்த்த அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்கான அவசியம், காங்கிரஸ் எழுச்சிக்கான முக்கியத்துவம் ஆகியன குறித்துப் பேசியுள்ளார்.
அந்தப் பேட்டியில் முதல்வர் ஸ்டாலின், "இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகியனவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் நம் தனிப்பட்ட கட்சி சார்ந்த அரசியல் மனநிலையை விலக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையே பலம் என்பதை உணர வேண்டும்.
தேசிய அரசியலில் திமுகவுக்கு எப்போதுமே முக்கியம் இருந்துள்ளது. இந்த நாட்டின் பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் நிர்ணயித்த கட்சி திமுக. நாடாளுமன்றத்தில் இன்று திமுக தான் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உள்ளது. ஆகையால் டெல்லியில் நாளை திமுக கட்சி அலுவலகம் திறப்பது, தேசிய அரசியல் அரங்கில் திமுகவின் அந்தஸ்து உயர்ந்திருப்பதன் அடையாளமாகப் பார்க்க வேண்டாம். நாங்கள் ஏற்கெனவே தேசிய அரசியலில் ஊன்றிய கட்சி தான்.
அதையும் தாண்டி தேசிய அரசியல், மாநில அரசியல் என்று வித்தியாசம் இருப்பதாக நான் உணரவில்லை. தேசிய அரசியல் என்பது மாநில அரசியலின் ஒட்டுமொத்த உருவம். அதனால் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
நாங்கள் பாஜகவை எதிர்ப்பதால் அதை வெறுப்பு அரசியலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நாங்கள் பாஜகவில் இருக்கும் தனி நபர்களை விமர்சிக்கவில்லை. பாஜக எனும் கட்சியின் சித்தாந்தத்தையே விமர்சிக்கிறோம். ஆகவே எங்களின் விமர்சனங்கள் எல்லாம் அரசியல் நெறிகளுக்கு உட்பட்டவை. அதிலிருந்து எப்போதுமே பிறழமாட்டோம்.
காங்கிரஸ் வீழ்ச்சி காண்பதால் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும்' என்பது ஒருசில மாநிலங்களில் இருந்து ஒலிக்கும் குரலாக இருக்கலாம். மற்ற மாநிலங்களில் அது எடுபடாது. என்னைப் பொருத்தவரை, பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், இடதுசாரிகளுடன் அனைத்து மாநிலக் கட்சிகளுமே கைகோக்க வேண்டும்.
தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து பாஜகவை ஓரங்கட்டி வைத்துள்ளன. ஆக,பாஜகவை எதிர்க்கும் ஒருமித்த கருத்து கொண்ட சக்திகள் தேர்தலின் போது மட்டும் ஒன்றிணைந்தால் போதாது. எப்போதுமே கொள்கை ரீதியாக பிணைப்பில் இருக்க வேண்டும். இதைப் போன்றதொரு நட்புறவை காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அண்மையில் எனது சகோதரர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்தபோது அவரை மேடையில் வைத்துக் கொண்டே இதை நான் வலியுறுத்தியிருக்கிறேன். இப்போது மீண்டும் அதே கோரிக்கையை நான் காங்கிரஸ் கட்சியிடம் முன்வைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT