Published : 01 Apr 2022 09:44 PM
Last Updated : 01 Apr 2022 09:44 PM
மதுரை: அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி பல கோடி ரூபாய் வசூலித்த இரிடியம் மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலைச் சேர்ந்தவர் ராம்பிரபு (எ) ராஜேந்திரன். இவர் இரிடியத்தில் முதலீடு செய்தால் அதிகளவு லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த முகம்மது தமீம் பேக் என்பவர் போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராம்பிரபுவை கைது செய்தனர்.
தன்மீதான மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி ராம்பிரபு சென்னை உயர் நீதிமன்ற மதுரைg கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, "இரிடியம் மோசடி வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின்னர் தான் ஒரு முடிவுக்கு வர முடியும்.
இப்போதுள்ள சூழலில் வழக்கை ரத்து செய்ய வேண்டியதில்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. போலீஸார் விசாரணையை 12 வாரத்தில் முடித்து, குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT