Published : 01 Apr 2022 08:28 PM
Last Updated : 01 Apr 2022 08:28 PM
கும்பகோணம்: உயர்கல்வி படிப்பைத் தொடர தங்களது குழந்தைகளுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு 25 ஆண்டுகளாக போராடிய பழங்குடியின மாணவர்களின் வீட்டுக்கே நேரில் சென்று, அவர்களில் தற்போதும் படிக்கும் 16 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சாதிச்சான்றிதழ் வழங்கினார்.
கும்பகோணம் அருகே தேனாம்படுகை கிராமம் மண்டகமேடு புதுத்தெருவில் பழங்குடியின இருளர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் உயர்கல்வி படிக்க சாதிச்சான்றிதழ் கிடைக்காததால், 10-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை எனக் கூறி சாதிச் சான்றிதழ் கேட்டு கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், கல்வித் துறைக்கு உத்தரவிட்டு உரிய கள ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டார். அவர்களும் சாதிச் சான்றிதழ் பெறாததால் உயர்கல்வி படிக்க முடியவில்லை என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து இன்று (1-ம் தேதி) மாலை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் நேரடியாக தேனாம்படுகை மண்டகமேடு புதுத்தெரு கிராமத்துக்கு சென்று, பழங்குடியினர் வசிக்கும் பகுதியை பார்வையிட்டார். பின்னர் பள்ளியில் படிக்கும் 16 மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு சாதிசான்றிதழை நேரடியாக வழங்கினார்.
இதனால் பழங்குடியின மக்களும், மாணவ, மாணவிகளும் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: ”கும்பகோணம் தாலுகா தேனாம்படுகை கிராமம் மண்டக்கமேடு புது தெருவில் 49 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகளுக்கு 25 ஆண்டு காலமாக சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இவர்கள் பழங்குடியினர் என்பதால், இந்த மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை, இவர்கள் பிற மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள், என்பதால் இவர்களுக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை.
தற்போது இவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அரியலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிருந்து இவர்களது ரத்த உறவுகள் பெற்ற சாதிச் சான்றிதழ்களை அடிப்படையாக கொண்டு தற்போது இருளர் என சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனால் இனி வருங்காலத்தில் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர்கல்வியை தொடரமுடியும். இதே போல் இந்த பகுதியில் மீதமுள்ள மாணவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு சில அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கேட்டுள்ளனர். அதையும் விரைவில் நிறைவேற்றித்தரப்படும்” என்றார்.
அப்போது வருவாய் கோட்டாச்சியர் லதா, வட்டாட்சியர் தங்க.பிரபாகரன் மற்றும் வருவாய்த்துறையினர், கல்வித்துறையினர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT