Published : 01 Apr 2022 04:34 PM
Last Updated : 01 Apr 2022 04:34 PM

சுங்கச்சாவடி கட்டண விவகாரத்தில் காங்கிரஸ் சந்தர்ப்பவாத மலிவு அரசியல் செய்கிறது: பாஜக விமர்சனம்

நாராயணன் | கோப்புப் படம்

சென்னை: சுங்கச்சாவடி கட்டண விவகாரத்தில் காங்கிரஸ் சந்தர்ப்பவாத மலிவு அரசியல் செய்கிறது என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இன்று முதல் தேசிய நெடுஞ்சாலலகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மோடி அரசு உயர்த்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சாலைகளை அமைக்க தனியாருடன் ஒப்பதங்களை செய்து கொண்டு, சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை நிர்ணயம் செய்தது யார்? ஆளும் கட்சியாக ஒன்றை செய்து விட்டு எதிர்க்கட்சியாக வேறொன்றை செல்வது ஏன்?

இந்தியாவில், 2004க்கு முன் அதாவது வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி இருந்தபோது, அதிக அளவில் அரசு நிதியிலேயே தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. அந்த சாலைகளை பராமரிக்கும் ஒப்பந்தங்கள் ஆறு வருடங்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வந்தவுடனேயே 2004லிருந்து விதிகள் தளர்த்தப்பட்டு, அதிக அளவில் தனியார்பங்களிப்புடன் சாலைகள் போடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் 20 முதல் 30 வருடங்களுக்கு போடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தனியாருடன் ஒப்பதங்கள் மேற்கொள்ளப்பட்டு அவர்களை முதலீடு செய்யவைத்தது அன்றைய காங்கிரஸ் அரசு. இதற்காக ஏகபோக மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வணிக நடைமுறைச்சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலை கட்டணவிதிகள் 2008 சட்டப்படி ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 ஆம் தேதியன்று மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தி கொள்ளலாம் என்று டி.ஆர்.பாலு மத்திய தபாக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டரீதியாக ஒப்பந்தம் செய்யப்பட்டன.

தற்போது தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் விலை உயர்த்தக்கூடாது என்றும் குரல் கொடுப்பவர்களில் பலர் அன்றைய மத்திய அரசில் அங்கம் வகித்தவர்கள் மற்றும் ஆதரவு அளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக, பாமக, காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள் சட்ட திருத்தங்கலளயும், தனியாருடைய பங்களிப்புகளையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கெல்லாம் தனியார் பங்களிப்புடன் கூடிய சாலைகள் கட்டமைக்கப்பட்டனவோ அங்கெல்லாம் மத்திய அரசு (அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு) 20 முதல் 30 வருடங்களுக்கான ஒப்பதங்களை மேற்கொண்டுள்ளது என்பதையும், அந்தந்த மாநில அரசுகள் இதை ஏற்றுக் கொண்டதோடு, நிலங்களை கையகப்படுத்தி கொடுத்ததோடு, அந்த தனியார் நிறுவனங்களின் வருவாயை வசூல் செய்வதற்கு பாதுகாப்பு
அளிப்பதாகவும் உறுதி செய்து கொடுத்துள்ளன. மேலும், ஒப்பந்தப்படி வசூல் செய்வதில் தடையோ அல்லது குறைகளோ இருந்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. இவையெல்லாம் அன்றைக்கு அமைச்சர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த கட்சியினருக்கும், கட்சிகளுக்கும் தெரியாமல் போனதா? செய்வதையெல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் மக்களை தூண்டும் விதத்தில் மலிவான அறிக்கை விடும் அரசியல் எட்டப்பர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

அரசோடு ஒப்பந்தம் செய்து கொண்டு, பல ஆயிரம் கோடிகளை வங்கிகளிடம் கடன் பெற்று சாலைகள் அமைக்கும் நிறுவனம் கடனுக்கான வட்டி உட்பட சாலைகள் அமைப்பதற்கான செலவினங்களை குறிப்பிட்ட வருடங்களில் லாபத்தோடு வசூல் செய்து கொள்ளுமாறு உள்ள சட்ட ரீதியான ஒப்பந்தத்தை எப்படி மீற முடியும்? அப்படி ஒருவேளை மீறுவதென்றாலும் அதன் இழப்பீட்டை மாநில அரசு அந்த நிறுவனத்திற்கு செலுத்துமா? மாநில அரசிடம் இதற்கான நிதி இருக்குமா? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் ஆட்சியில் இருந்த போது ஒப்பந்தம் செய்த கட்சியினர் எதிர்க்கட்சியான பிறகு எடுத்தேன், கவிழ்த்தேன் என பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் உள்ள 500 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவித்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அந்த சாலைகளை விரிவுபடுத்த வேண்டும். என்று திமுக அரசு கோரிக்கை விடுப்பதை அதன் கூட்டணி கட்சிகள் ஏற்க மறுத்து எதிர்க்கின்றைனவா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அப்படி எதிர்ப்பார்களேயானால், தற்போது உள்ள தேசிய நெடுஞ்சாலைகளையும் தமிழக அரசே ஏற்று பராமரித்து ஒப்பந்ததாரர்களுக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பார்களா?

சுங்கச்சாவடிகளில் முறைகேடுகள் இருப்பின் அவற்றை சீர்செய்து, முறைபடுத்தி, முடிந்த வரையில் சட்டப்படி எந்தெந்த ஒப்பந்ததாரர்கள் முறை தவறி வசூல் செய்தனர் என்பதை கண்டறிந்து சீரான போக்குவரத்தை உறுதி செய்துள்ளது மத்திய பாஜக அரசு தமிழகத்தில் இரண்டு சுங்கச்சாவடிகள் உட்பட முழுவதும் 100 கோடிக்கும் குறைவான முதலீடுகள் செய்யப்பட்ட சுங்கச்சாவடிகளை அகற்றியுள்ளது பாஜக அரசு. மேலும் படிப்படியாக சாலைகளின் தரத்தை உயர்த்தி வசதியை கட்டமைத்து செயலாற்றி கொண்டிருக்கிறது பாஜக அரசு.

கடந்த 8 வருட பாஜக ஆட்சியில், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் பல மணி நேரம் காத்திருந்து கட்டணம் செலுத்துவதால் ஏற்பட்டுக் கொண்டிருந்த நேர இழப்பு மற்றும் எரிபொருள் இழப்பை 'பாஸ் ட் டேக்' (Fast Tag) டிஜிட்டல் அட்டைகளை பயன்படுத்துவதன் மூலம் சுலபமாக தீர்த்து வைத்துள்ளது சிறப்பு. மேலும், முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் ஒப்பந்ததாரர்களின் உரிமங்களை ரத்து செய்வது, உரிய இழப்பீடுகளை பெற்றுத் தருவது, நிலுவையில் உள்ள பணிகளை உரிய நேரத்தில் செய்ய வலியுறுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய நெடுஞ்சாலல ஆணையம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்த சாலைகளில் விபத்துகளை குறைக்க, வசதிகளை பெருக்க பல்வேறு நடவடிக்லைகளை எடுத்து வருவது பாராட்டத்தக்கது. மத்திய அரசு 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடையே உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில், சாவடிகள் அகற்றப்பட்டு புவியிடங்காட்டி அல்லது
உலக இடநிலை உணர்வி (GPS) முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூல விரைவான பயணம் உறுதி செய்யப்படுவதோடு எரிபொருள் சேமிக்கப்படும்.

ஆனால், ஆட்சியில் இருந்த போது எடுத்த நடவடிக்கைகளின் மீது, எதிர்க்கட்சியாக இருக்கும் போது நேர் எதிரான கருத்து தெரிவிப்பது சந்தர்ப்பவாத மலிவு அரசியல் மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம் என்பதை காங்கிரஸ் கட்சி உணரவேண்டும்." என்று நாராயணன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x