Published : 01 Apr 2022 02:55 PM
Last Updated : 01 Apr 2022 02:55 PM
சென்னை: தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் வாழும் தெலுங்கு, கன்னட மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் " அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன் உகாதி புத்தாண்டுத் திருநாளைச் (ஏப்.2) சிறப்புடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்தில் வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் நலனில் திமுக அரசு என்றுமே அக்கறையோடு செயல்பட்டு வந்துள்ளது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உகாதி திருநாளில் அரசு விடுமுறை அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
வரலாற்றுரீதியாகவே விந்திய மலைத்தொடருக்குத் தெற்கே வாழும் திராவிட மக்கள் தமக்குள் ஏராளமான பண்பாட்டுக் கூறுகளில் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர். ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக விளங்குகின்றனர். இந்தத் தொடர்ச்சி என்றும் நீடிக்க வேண்டும். நமக்கிடையேயான உறவு வலுப்பட வேண்டும். நமது பண்பாட்டையும் மொழியையும் காக்க ஒன்றிணைந்து நிற்பது வரலாற்றுத் தேவை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
வேற்றுமைகள் கடந்து, நம்மிடையேயான உறவைப் போற்றும் திருநாளாக இந்த உகாதித் திருநாள் அமைந்திட தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT