Published : 01 Apr 2022 02:09 PM
Last Updated : 01 Apr 2022 02:09 PM

தமிழகத்திலும் இதேபோல் மாதிரிப் பள்ளி தொடங்கப்படும்: டெல்லி அரசுப் பள்ளியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் உறுதி

டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியை பார்வையிட சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்த வரவேற்ற பள்ளி மாணவர்கள்.

புதுடெல்லி: "டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியை போல தமிழகத்திலும் விரைவில் மாதிரிப் பள்ளி தொடங்கப்படும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது நாளான இன்று மேற்கு டெல்லி, வினோத்நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டார். பள்ளியை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்றனர். அந்தப் பள்ளி மாணவர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அங்குள்ள அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடங்கள் எப்படி கற்பிக்கப்படுகிறது, ஏசி வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இலவசக் கல்வி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கி கூறினார். பள்ளியின் கீழ் தளத்தில் உள்ள அறையில் மாதிரி பள்ளி தொடர்பான வீடியோ திரையிடப்பப்பட்டது. மேலும், பள்ளியின் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.

மகிழ்ச்சி வகுப்பு (Happy Class):டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மகிழ்ச்சி வகுப்புகள் அதாவது புத்தகமில்லா வகுப்புகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். இந்த நாளில் மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில், இசை, யோகா உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது என்பது குறித்தும் விவரிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் பள்ளி மாணவ, மாணவர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "டெல்லியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளை பார்வையிட என்னை அழைத்து வந்துள்ளார். அதற்காக நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் புதிததாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கக் கூடிய எங்களது ஆட்சி, எல்லா துறைகளுக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறதோ, அதைவிட அதிகமான அளவிற்கு, கல்விக்கும் மருத்துவத்திற்கும் அதிகமான முக்கியத்துவத்தை நாங்கள் தந்து கொண்டிருக்கிறோம்.

இன்று இந்த மாதிரி பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ, அதேபோல் ஒரு பள்ளியை தமிழகத்தில் விரைவில் நாங்கள் உருவாக்கப் போகிறோம். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பணிகள் நிறைவுற்று அந்த பள்ளியை நாங்கள் திறக்கிற நேரத்தில் நிச்சயமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை நாங்கள் அழைக்க இருக்கிறோம். அவரும் வருவார், வரவேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x