Published : 01 Apr 2022 01:29 PM
Last Updated : 01 Apr 2022 01:29 PM
புதுடெல்லி: அரிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் தருமபுரி தொகுதி திமுக எம்.பியான டி.என்.வி.செந்தில்குமார் பூஜ்ஜிய நேரத்தில் பேசியது: "சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிறுவப்பட்ட திரள்நிதி திரட்டல் தளம் ஒன்றை தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. இருப்பினும், அரிதான நோய் சிகிச்சைக்கு தேவைப்படும் தொகையை ஒப்பிட்டுப் பார்த்தால் வெறும் ரூ.1,16,000 மட்டும் இதுவரை சேகரிக்கப்பட்டு இருக்கின்றன. மூன்றாம் நிலை என்று சொல்லக்கூடிய நோயாளிகள் மட்டும் 250 நபர்கள் சிகிச்சைக்காக பதிவு செய்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். இவற்றில் 50 நோயாளிகள் தங்கள் சிகிச்சையைத் தொடங்க அவசர உதவி தேவைப்படுகிறது. குறைந்தபட்ச மதிப்பீடுகளின்படியே, இதுவரை நான்கு குழந்தைகள் கடந்த சில மாதங்களில் உயிர் இழந்துள்ளனர்.
எனவே, தேசிய ஆரோக்கிய நிதி திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என பல வேண்டுகோள்கள் வைக்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் மூலமாக நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அரசு முற்படவேண்டும். இல்லை என்றால் நோயாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறும்.
எனவே, மேற்கண்ட திட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் குழு மூன்றிற்கானப் பிரிவு 'அ' வில் காணப்படும் நோயான காச்சர் நோய், பாம்பே நோய், ஃபேப்ரி நோய் மற்றும் எம்பிஎஸ்-I நோய்களுக்கு தேவைப்படும் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசிடம் நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்'' என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT