Published : 31 Mar 2022 01:36 PM
Last Updated : 31 Mar 2022 01:36 PM
சென்னை: வெளிப்படையான அரசை நடத்துகிறோம் என்று மகிழ்ந்துகொள்ளும் முதல்வர் நாளையாவது, தனது "ரிப்போர்ட் கார்டை" டெல்லியில் தேசிய ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து அக்கட்சி மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 491ல், மாதந்தோறும் முதல் பணி நாளன்று தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டு, அதனைத் தொடர்ந்து சாதனை அறிக்கையை (ரிப்போர்ட் கார்டு) முதல்வர் ஊடகங்களுக்கு வழங்குவார் என்று சொல்லப்பட்டு இருந்தது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த 26.10.21 அன்று ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டு, எப்போது Report Card வெளியிடப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். திமுக ஆட்சி அமைந்து 10 மாதங்களாகியும், தாங்கள் சொல்லியபடி, இதுவரை ஒருமுறை கூட முதல்வர் ஊடகங்களைச் சந்தித்து ரிப்போர்ட் கார்டை வெளியிடவில்லை. இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும் , ஏப்ரல் மாதத்தின் முதல் பணிநாளான, நாளை(ஏப்ரல் 1 அன்று) வாக்களித்தபடி ரிப்போர்ட் கார்டை முதல்வர் வெளியிடுவாரா என்று மக்கள் நீதி மய்யம் மீண்டும் ஒரு முறை கேள்வி எழுப்புகிறது.
வெளிப்படையான அரசை நடத்துகிறோம், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் இப்போதே பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று மகிழ்ந்துகொள்ளும் முதல்வர் நாளையாவது , தனது "ரிப்போர்ட் கார்டை" டெல்லியில் தேசிய ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாமா? ஒருவேளை கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லையே என்று திமுக கடந்து செல்லுமானால், தனது தேர்தல் வாக்குறுதிகளில் இதுவரை நிறைவேற்றியது எது? ஏமாற்றியது எது? நிலுவையில் உள்ளது எது? என்பது குறித்தான "ரிப்போர்ட் கார்டை" உரிய தரவுகளோடு மக்கள் நீதி மய்யம் விரைவில் வெளியிடும் என்று தெரிவித்துக் கொள்கிறது.
கொடுக்கப்பட்ட 505 தேர்தல் வாக்குறுதிகளும் 10 மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவரவில்லை. ஆனால், எவ்வளவு நிறைவேற்றியுள்ளீர்கள் என்பதை ஆதாரங்களோடு முதல்வர் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தவே விரும்புகிறோம். அதுவும், நீங்கள் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்ற அடிப்படையிலேயே கேட்கிறோம். சொல்லாதைச் செய்யவேண்டாம். குறைந்தபட்சம் சொன்னதையாவது செய்யுங்கள் என்றே கேட்கிறோம்." என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...