Published : 31 Mar 2022 11:52 AM
Last Updated : 31 Mar 2022 11:52 AM
சென்னை: பெட்ரோல் விலை உயரும் நிலையில், சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பது நியாயமா? என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், சுங்கக் கட்டணங்களையும் நாளைமுதல் (ஏப்.1) உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 24 இடங்களில் சுங்கக் கட்டணம் அதிகரிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ உரிமம் காலாவதியான சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சுங்கச் சாவடி கட்டணங்களை உயர்த்தியிருப்பது மோசமான நடவடிக்கையாகும். பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்?
மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி சுங்கக் கட்டண உயர்வை கைவிடுவதுடன், காலாவதியான சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வானகரம் மற்றும் சூரப்பட்டு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நாளை (1-ம் தேதி) முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் கட்டண உயர்வு விவரம்: சென்னை புறநகரில் உள்ள சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை அதிகரித்து மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வானகரம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ.45-ல் இருந்து ரூ.50 ஆகவும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.65-ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆகவும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கு ரூ.90 -ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை புறநகரில் உள்ள வானகரம், பரனூர், சூரப்பட்டு, சென்னசமுத்திரம், நெமிலி ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...