Published : 31 Mar 2022 05:57 AM
Last Updated : 31 Mar 2022 05:57 AM
சென்னை: துறைவாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஏப்.6 தொடங்கி மே 10-ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மார்ச் 18-ம் தேதி பொது பட்ஜெட்டும், 19-ம்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 24-ம் தேதி வரைபட்ஜெட்கள் மீதான விவாதம் நடந்தது. அத்துடன் தேதி குறிப்பிடாமல் பேரவை தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின், துறை வாரியான மானிய கோரிக்கைகள் விவாதத்துக்காக சட்டப்பேரவை மீண்டும் ஏப். 6-ம்தேதி தொடங்கும் என்றும், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்திருந்தார்.
அதன்படி, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.இதில், பேரவை துணைத் தலைவர்கு.பிச்சாண்டி, அரசு கொறடா கோவி.செழியன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி ஆகியோரும், அதிமுக சார்பில் கொறடா எஸ்.பி.வேலுமணி, காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா, பாமக தலைவர் ஜி.கே.மணி, பேரவைச் செயலர் கி.சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியதாவது: அரசுத் துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், வரும் ஏப். 6 முதல் நடைபெறும். ஏப்ரல் 6 முதல் மே 10-ம்தேதி வரை 22 நாட்கள் கூட்டத் தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தினமும் பிற்பகல் 2 மணிவரை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். வழக்கம்போல கேள்வி நேரம் இடம் பெறும்.கேள்வி நேரத்துக்கு பிறகு பேரவைவிதி 110-ன்கீழ் முதல்வர் வெளியிடும் அறிவிப்பு நேரலையில் ஒளிபரப்பப்படும். அமைச்சர் பதிலுரையும் நேரலையில் வரும். கூட்டத்தொடர் நிகழ்வுகளை முழுமையாக ஒளிபரப்புவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. படிப்படியாக இது நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் நிலுவையில் உள்ள 19 சட்ட மசோதாக்கள் குறித்து ஆளுநரிடமே கேட்கலாம். நாங்கள் பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றி சட்டத்துறை மூலம் ஆளுநருக்கு அனுப்பி வைத்துவிட்டோம்.
தற்போதுள்ள சட்டப்பேரவை வளாகத்தில் உணவகம் அமைக்க இடம் போதவில்லை. நல்ல இட வசதியுடன் கூடிய சட்டப்பேரவை கட்டிடத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டினார். அந்த வரலாறை மீண்டும் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை. தற்போதுள்ள இடத்தில் சந்தோஷமாக பேரவையை நடத்தி வருகிறோம். சட்டப்பேரவையை புதிய வளாகத்துக்குமாற்றுவது குறித்து அமைச்சரவைதான் முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT