Published : 31 Mar 2022 08:30 AM
Last Updated : 31 Mar 2022 08:30 AM
சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிகளுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 1,370 கணினிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒவ்வொரு உயர்நிலைப்பள்ளிக்கும் 10 மேசை கணினிகள், மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா 20 மேசைக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பில் இன்போசிஸ் நிறுவனத்தால் 1,370 புத்தாக்கம் செய்யப்பட்ட மேசை கணினிகளை சென்னை பெருநகர மாநகராட்சியின் 70 பள்ளிகளுக்கு வழங்கும் அடையாளமாக 6 பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு முதல்வர்ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் மேசைக் கணினிகள் வழங்கினார்.
இன்போசிஸ் நிறுவனத்தால் தற்போது வழங்கப்பட்டுள்ள 1,370 மேசைக் கணினிகள் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 38 உயர்நிலை மற்றும் 32 மேல் நிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்படுவதால் 28 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
இந்த பள்ளிகளுக்கு கணினிகள் வழங்குவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், கற்பித்தல் - கற்றல் என்ற குழுவை ஏற்படுத்தி, சுயமாக கற்றல் குறித்த எண்ணத்தை பேணி வளர்க்கும்.
மேலும், மாநிலத்தில் மின்னாளுமை மற்றும் டிஜிட்டல் இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையால், குறிப்பு தரநிலைகள் கையேடு, தகவல் தொலை தொடர்பு உட்கட்டமைப்புக் கொள்கை, தமிழ்நாடு தரவுக் கொள்கை உள்ளிட்ட சில கொள்கைகள் வெளியிடப்பட்டன. இவை தமிழக மாநில வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இக்கொள்கைகள் ஒத்திசைந்த முறையில் மின்னாளுமை பயன்பாடுகளை பயன்படுத்தவும், பாதுகாப்பான முறையில் தனியார் மூலம் செயலிகள் உருவாக்க அனுமதிக்கவும், பொது நன்மைக்காக தரவுகளை பயன்படுத்த அனுமதிக்கவும் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பை விரைவாக செயல்படுத்தவும் உதவும்.
இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், குறிப்பு தர நிலைகள் கையேடு, தமிழ்நாடு தொலை தெடார்பு உட்கட்டமைப்புக் கொள்கை, தமிழ்நாடு தரவுக் கொள்கை ஆகிய மூன்று கொள்கைகளின் பிரதிகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் நீரஜ் மிட்டல், மின்னாளுமை முகமை தலைமை செயல் அலுவலர் கே.விஜயேந்திரபாண்டியன், மாநகராட்சி துணை ஆணையர் டி.சினேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT