Published : 30 Mar 2022 09:18 PM
Last Updated : 30 Mar 2022 09:18 PM

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதால் பிரதமர் மனம் காயப்படுகிறது: செல்லூர் ராஜூ கவலை

மதுரை: மத்திய அரசை தமிழக அமைச்சர்கள் ஒன்றிய அரசு என்று கூறுவதால் பிரதமரின் மனம் காயப்படுகிறது என்று முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கவலை தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட 71 வது வார்டு மாடக்குளம் பகுதியில் உள்ள ஈடாடி அய்யனார் கோயில் அருகே சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட புதிய சமுதாயநலக்கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வில்லாபுரம் ஜெ.ராஜா, அண்ணாத்துரை, குமார், பைக்காரா கருப்பசாமி, முத்துவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ கூறியது: "திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு கைப்பேசி பயன்பாடும் ஒரு காரணமாக இருக்கிறது. ரவுடிகளுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. ரவுடிகள் பட்டியலில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளே உள்ளதால், காவல்துறை ரவுடிகளை கைது செய்ய அச்சப்படுகிறது.

அமைச்சரை ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றம் செய்திருப்பது தண்டனை ஆகாது. திமுக அமைச்சர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என சொல்லி சிறுமைப்படுத்தி வருவது பிரதமர் மனதை காயப்படுத்துகிறது. தமிழக மக்களின் நலனுக்காக அதிகமான கோரிக்கைகளுடன் பிரதமரை சந்திக்கும் முதல்வரின் டெல்லி பயணம் வெற்றி பெற்று வர வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அதிமுக வலுவான அழுத்தம் கொடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x