Published : 30 Mar 2022 08:47 PM
Last Updated : 30 Mar 2022 08:47 PM
மதுரை: மனைவி கொலை வழக்கில் கணவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே தேனிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (52). இவருக்கு 3 மனைவிகளுடன் மகன், மகள்கள் மொத்தம் 11 பேர் உள்ளனர். கடந்த 2019-ல் தனது 3-வது மனைவியின் மகளான 17 வயது சிறுமியை முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை தனது தாயார் பானுமதியிடம் (50) சிறுமி கூறியுள்ளார்.
இதையடுத்து, கணவரை பானுமதி கண்டித்துள்ளார். அன்றைய தினம் மாலையில் மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டிச் சென்ற பானுமதியை தென்னதிரையன்பட்டி யூக்கலிப்டஸ் காட்டில் முருகேசன் கொலை செய்து சடலத்தை வீசி சென்றார்.
இதுகுறித்து புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் முருகேசன் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம், போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
முருகேசனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு ஒப்புதல் கோரி புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் ஆய்வாளர் சார்பிலும், தண்டனையை ரத்து செய்யக்கோரி முருகேசன் தரப்பிலும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு விசாரித்தது. பின்னர், மனைவி கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தும், மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...