Published : 30 Mar 2022 07:16 PM
Last Updated : 30 Mar 2022 07:16 PM

வகுப்புவாத சக்திகளை வீழ்ச்சி அடையச் செய்வதில் தமிழகம் முன்னுதாரணமாக திகழ வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாட்டை அகில  இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தொடங்கி வைத்தார்

மதுரை: வகுப்புவாத சக்திகளான பாஜக - அதிமுகவை வீழ்த்தி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு ராஜா முத்தையா மன்றத்தில் இன்று தொடங்கியது. இம்மாநாட்டை அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: "இன்றைக்கு நமது நாட்டின் நிலை மிக மோசமாக மாறிக்கொண்டிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் ஆர்எஸ்எஸ் கொள்கையான இந்துத்துவாவை அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் வளங்களெல்லாம் மத்திய பாஜக அரசு தனியாருக்கு தாரை வார்க்கிறது. நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள், குடியுரிமைகள் பறிக்கப்படுகின்றன.

தற்போது ஆர்எஸ்எஸ் இந்துத்துவா சக்திகளிடமிருந்து, பாரம்பரிய மதச்சார்பற்ற ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்ட காலமாகத்தான் அமைந்திருக்கிறது. பல மாநிலங்களின் மொழி, கலாச்சாரங்களை கொண்ட ஒன்றியம்தான் இந்தியா. இந்தியாவின் பன்முக கலாச்சாரம், ஒருமைப்பாட்டிற்கு பாஜகவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக அரசு பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை நசுக்கி ஒற்றை கலாச்சாரமாகவும், ஒற்றை நாடாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

மத்திய அரசாங்கத்திற்கு எதிராக பல தரப்பினரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் பாஜக மீண்டும் மீண்டும் வெற்றி பெறுகிறது. ஏன் வெற்றி பெறுகிறது என ஆராய வேண்டும். இந்துத்துவாவை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தி மக்கள் பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளுகின்றனர். மாறாக மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை செய்து தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.

பாஜக அரசு நாட்டு மக்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்தி சாதாரண மக்களிடமிருந்து பல லட்சம் கோடியை கொள்ளையடித்து தனியார் நிறுவனங்களின் கையில் கொடுக்கின்றனர். நாட்டின் பிரதமரோ, அமைச்சர்களோ நாட்டின் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை. இந்து முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். எனவே வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக மக்களைதிரட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நாட்டில் சில சவால்களை சந்திக்கவும், எதிர்கொள்ளவும் நமது கட்சியை வலுப்படுத்த வேண்டும். முக்கியமாக இடதுசாரி கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும். இதன் மூலம் மக்களிடையே கிளர்ச்சிகளை உருவாக்க வேண்டும். வகுப்புவாத, எதேச்சதிகாரத்திற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து முறியடிக்க வேண்டும்.

தமிழகத்தில் வகுப்புவாத சக்திகளான பாஜக, அதிமுகவுக்கு மிகப்பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அது இந்தியா முழுமைக்குமான முன்னுதாரணமாக திகழ வேண்டும். நம்முடையை கட்சியையும், இடதுசாரி சக்திகளையும் வலுப்படுத்தி, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்” என்றார்.

இந்த மாநாட்டிற்கு அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் சு.வெங்கடேசன் எம்பி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்என்எஸ்.வெங்கட்ராமன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேலையறிக்கை சமர்ப்பித்தார். முன்னதாக கட்சி மாநாட்டு கொடியை மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான டி.கே.ரெங்கராஜன் கொடியேற்றி வைத்தார்.

இதில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், எம்.ஏ.பேபி, மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.சவுந்திரராஜன், சுதா சுந்தரராமன், ஏ.கே.பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x