Published : 30 Mar 2022 03:27 PM
Last Updated : 30 Mar 2022 03:27 PM
புதுச்சேரி: 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதலின் பேரில் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
1990-ன் தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.பண்டிட் சமூகத்தினர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனுபம் கெர், தர்ஷன் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது.
இந்தப் படத்திற்கு பாஜக ஆளும் பல மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ளன. புதுவையிலும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தினை சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திரையரங்கில் படத்தை பார்த்தனர்.
கடந்த 21ம் தேதி 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு புதுவை அரசு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கக்கோரி புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன், சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். இந்த கோரிக்கையை ஏற்று 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
இதன்படி திரைப்படத்திற்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதலின்பேரில் உள்ளாட்சித்துறை சார்பு செயலர் கிட்டிபலராமன் கேளிக்கை வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT