Published : 30 Mar 2022 02:55 PM
Last Updated : 30 Mar 2022 02:55 PM

தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தமிழக முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ,கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவக் கருவிகளின் சேவையையும் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 30) தொடங்கி வைத்தார்.

தமிழக மக்களின் சுகாதார தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒர் அம்சமாக, சுகாதார கொள்கை வகுப்பதில் குடிமக்களின் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட மற்றும் மாநில அளவில் சுகாதாரப் பேரவை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இப்பேரவையில் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில், அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத் துறை, பள்ளிக்கல்வி துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர், அரசு சாரா அமைப்புகள் (NGO), பொது சமூக அமைப்புகள், பொதுமக்கள், தனியார் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான தேவைகளை நேரடியாக மக்களிடமே கேட்டறிந்து, அக்கோரிக்கைகளுக்கு தீர்வுகாணும் வகைகளில் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது, மேலும், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் போன்றோருடைய தனிப்பட்ட தேவைகள் முன்னிலைபடுத்தி தீர்வு காணப்படுகிறது.

இம்முன்னோடி திட்டத்தில் இதுநாள்வரை சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், தருமபுரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தென்காசி, நீலகிரி, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட சுகாதார மக்கள் சபையின் தீர்மானங்கள், மாநில சுகாதாரப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு, மருத்துவ கட்டமைப்பு வலுப்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இத்தைகய மக்கள் சபைக் கூட்டங்கள் மூலம், சுகாதார அமைப்பில் வெளிப்படைத் தன்மையும், பொறுப்புணர்வும் மேம்படும், சுகாதாரம் மற்றும் மருத்துவம் தொடர்பான கொள்கை முடிவு எடுப்பதில் சமுதாயத்தின் ஈடுபாடும், பங்கேற்பும் அதிகரிக்கும்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட பரிசோதனை திட்டம்

இப்பேரவையை தொடங்கி வைக்க தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வருகை புரிந்த போது, தமிழக முதல்வர், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளின் சேவையை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி, பேறுசார் மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையங்கள், சீமாங்க் மையங்கள் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில மருத்துவமனையில் அதாவது அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக Autodelfia Maternal Analyzer என்ற மருத்துவக் கருவி தருவிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அதிநவீன முழு உடற்பரிசோதனை மையத்தில், சிறப்பு தனித் தொகுப்பாக, ஆரம்ப நிலை கரு பரிசோதனைக்கு 1000 ரூபாயும், இப்பரிசோதனையுடன் கர்ப்பிணித் தாய்க்கு கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள 2000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கர்ப்ப காலத்தில் (11-14 வாரங்கள்) இந்த பரிசோதனை செய்வதன் மூலமாக கரு மரபணு சார்ந்த பல பிரச்சனைகள் கண்டறியப்பட்டு, உடல் உறுப்பு ஊனத்துடன் குழந்தை வளர்வது தவிர்க்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், வனத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x