Published : 30 Mar 2022 01:17 PM
Last Updated : 30 Mar 2022 01:17 PM
சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக முந்தைய அதிமுக அரசுஅமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது.
நீண்ட காலமாக அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனவும், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் இருக்கும் ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், ”ஏற்கெனவே இதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 3 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அமைச்சரவை தீர்மானத்தை 42 மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்.
மேலும், இதேபோல அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில், ஏற்கனவே 20 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் நளினியை தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பது சட்டவிரோத காவல்” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ”ஆளுநருக்கு எதிராக உத்தரவிடும்படி கோர முடியாது. ஏற்கெனவே 3 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை எப்படி ஏற்க முடியும், தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் என்ன உத்தரவை பிறப்பிக்க முடியும் ” என கேள்வி எழுப்பினார்.
ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆயுள் கைதியை எப்படி முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க வேண்டியது ஆளுநர் தான் எனவும் தெரிவித்தார்.
பின்னர், முன் கூட்டியே விடுதலை செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா அல்லது 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தை ஒப்பிடும்போது, உயர் நீதிமன்றத்துக்கு குறைந்த அதிகாரமே உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT