Published : 30 Mar 2022 10:07 AM
Last Updated : 30 Mar 2022 10:07 AM

தனுஷ்கோடியில் இருந்து பாக் ஜலசந்தி கடலை குறைந்த நேரத்தில் கடந்த தேனி மாணவர்: தலைமன்னாரில் இருந்து திரும்பி நீந்தி வந்ததிலும் புதிய சாதனை

ராமேசுவரம்: தனுஷ்கோடி - இலங்கை தலைமன்னார் இடையேயான பாக் ஜலசந்தி கடல் பகுதியை குறைந்தநேரத்தில் (7 மணி நேரம் 55 நிமிடம்) நீந்தி தேனியைச் சேர்ந்தபள்ளி மாணவர் சிநேகன் நேற்றுசாதனை படைத்தார். மேலும், தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு திரும்பி நீந்தி வந்ததிலும் அவர்நடப்புச் சாதனையை முறியடித்தார்.

பாக் ஜலசந்தி கடல் பகுதிதமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும், ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதி ஆகும். இதுவரை 4 பெண்கள் உட்பட 17 பேர் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கோ அல்லது தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கோ நீந்திச் சென்றவர்கள்.

ஆனால், ஓரிடத்திலிருந்து புறப்பட்டு மறுபுறத்தை அடைந்த பின்பு தொடர்ச்சியாக மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு தொடங்கிய இடத்துக்கே வந்து சாதனை புரிந்தவர்கள் 2 பேர் மட்டுமே. அதில் ஒருவர், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த வி.எஸ்.குமார் ஆனந்தன். இவர் 1971-ல் மொத்தம் 60 கி.மீ. தொலைவை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்தார். 11.4.2021-ல் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர 28 மணி 19 நிமிடங்களில் நீந்தி கடந்தார்.

இந்நிலையில் தேனியை சேர்ந்த நீதிராஜன்-அனுஷா தம்பதியின் மகன் சிநேகன் (14). தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர். இவர் தேசிய, மாநில அளவிலான பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தனுஷ்கோடியிலிருந்து இலங்கை தலைமன்னார் சென்று,அங்கிருந்து மீண்டும் தனுஷ்கோடிக்கு வரையிலும் உள்ள பாக்ஜலசந்தி கடலில் இருபுறமும் நீந்தி கடக்க இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும்பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தார்.

இந்தியா - இலங்கை இருநாட்டு அனுமதி கிடைத்த நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிஅளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து நீந்த தொடங்கி 7 மணி 55 நிமிடங்களில் இரவு 9.55 மணியளவில் தலைமன்னாரை அடைந்தார். இதன்மூலம் 2018-ல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த துளசி சைதன்யா (29), 8 மணி 25 நிமிடத்தில் நீந்தி கடந்த சாதனையை சிநேகன் முறியடித்தார்.

திரும்பி வந்ததிலும் சாதனை

தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து நீந்த தொடங்கி,நேற்று காலை 9.45 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையை அடைந்தார். இதன் மூலம், 11.4.2021-ல் இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர 28 மணி 19 நிமிடங்களில் நிகழ்த்திய சாதனையை, 19 மணி 45 நிமிட நேரத்தில் நீந்தி முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x