Published : 30 Mar 2022 09:06 AM
Last Updated : 30 Mar 2022 09:06 AM

வேளச்சேரியில் ரூ.5.84 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஆய்வு

சென்னை: சென்னை வேளச்சேரியில் ரூ.5.84 கோடியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.

இந்நிலையில், வரும் மழைக் காலங்களில் மழை, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில், அதிக அளவில் தண்ணீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளுமாறும் முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி `சிங்காரச் சென்னை 2.0' திட்டம், உலக வங்கி நிதியுதவி, கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதிகளின் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 17-ம் தேதி ராயபுரம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளையும், 23-ம் தேதி தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட சித்தரஞ்சன் சாலை, செனடாப் பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட வேளச்சேரி பிரதான சாலையில், ரூ.2.22 கோடியில் 915 மீட்டர்நீளத்துக்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், காந்தி தெரு,சீதாபதி நகர் 2-வது குறுக்குத் தெருவில் ரூ.3.62 கோடி மதிப்பில் 1,500 மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்.

அப்போது, "வரும் பருவமழைக் காலத்தில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில், சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்அசன் மவுலானா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் சி.விஜயராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x