Published : 30 Mar 2022 06:04 AM
Last Updated : 30 Mar 2022 06:04 AM

கடலூரில் நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் தகுதி இருந்தும் இடம்பெறாதவர்கள் மனு அளிக்கலாம்: அமைச்சர் தகவல்

நடுவீரப்பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ், நகை ஆகியவற்றை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் தகுதி இருந்தும் இடம் பெறாதவர்கள் மனு அளிக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

குறிஞ்சிப்பாடி மற்றும் நடுவீரப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகை மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் வழங்கினார்.

முன்னதாக கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் ஏடிஎம் வாகனத்தை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தது:

கடலூர் மாவட்டத்தில் உள்ள 181 கூட்டுறவு நிறுவனங்களில் மொத்தம் 29 ஆயிரத்து 994 பயனாளிகளுக்கு ரூ.116.10 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் 1,814 பயனாளிகளுக்கு ரூ.7.84 கோடி மதிப்பீட்டிலும், கடலூர் ஒன்றியத்தில் 1,808 பயனாளிகளுக்கு ரூ.6.71 கோடி மதிப்பீட்டிலும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.

தற்போது கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகை மற்றும் சான்றிதழ்களை ஒப்படைக்கும் பணி அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் நடை பெற்று வருகிறது.

நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் தகுதி இருந்தும் இடம் பெறாதவர்கள், தங்கள் பகுதியை சார்ந்த கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளரிடம் மனு செய்யலாம் என்றார்.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் திலீப்குமார், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x