Published : 29 Mar 2022 04:23 PM
Last Updated : 29 Mar 2022 04:23 PM
சென்னை: "மாலை 6.15 மணி வரை அலுவலகத்தில் இருப்பேன். முழு போலீஸ் படையை பயன்படுத்தி, நீங்கள் என்னை கைது செய்யவில்லை என்றால், நீங்கள் சொல்வதை இந்த தமிழக மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்" என்று திமுகவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்து பேசினார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பத்திரிகையாளர் சந்திப்பில் திமுக அமைப்புச் செயலாளர் பேசும்போது ஒரு வார்த்தையை கூறியிருந்தார். நான் அதிமுக அமைச்சர்களை பிளாக்மெயில் செய்து பணம் வாங்கியிருக்கிறேன் என்று. நான் இன்னும் 6 மணி நேரம் கமலாலயம் அலுவலகத்தில் அமர்ந்திருப்பேன். தெம்பு, திராணி இருக்கு, திமுகவிடம் உண்மையாகவே ஆதாரம் இருக்கிறதென்றால், நான் இன்னும் 6 மணி நேரத்தில் கமலாலயத்தில் உள்ள அலுவலகத்துக்கு வந்து என்னை கைது செய்து உள்ளே அனுப்ப வேண்டும்.
இல்லையென்றால், நம் மீது பரப்பக்கூடிய பொய்களில் இதுவும் ஒரு பொய். அவர்களைப் போல கோழைத்தனமாக கண்டன நோட்டீஸ் கொடுப்பதெல்லாம் நமக்கு வராது. கோழையாக ஒரு நோட்டீஸிற்கு பின் ஒளிந்துகொண்டு பாரதப் பிரதமரை பழிச்சொல் பேசிவிட்டு, ஒவ்வொரு மனிதராக பழிசொல் பேசிவிட்டு, காமராஜர் காலத்தில் இருந்து பட்டப்பெயர் கொடுத்து அழைப்பதெல்லாம் திமுகவின் பாரம்பரியம், அவர்களது ரத்தத்தில் ஊறியிருக்கிறது.
உங்களைப்போல பயந்து, ஒரு மான நஷ்டஈடு நோட்டீஸ் கொடுத்துவிட்டு, அதன் பின்னால் ஒளிந்துகொள்கின்ற ஆள் இல்லை. விவசாயம் செய்து, ஆடு மாடுகள் வளர்த்து, குறிப்பாக திமுகவைப் போல அவர்கள் அலுவலகத்தில் இருக்கிற செயலாளர்களைப் போல கப்பம் கட்டுவதற்காக வரவில்லை. அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு நபராக அமைச்சராக வரவேண்டும் என்பதற்காக ஆர்.எஸ்.பாரதி போல பெட்ஷீட் போட்டு, தலையணை போட்டு தூங்கவில்லை.
சுயமாக, தனியாக முளைத்து தமிழகத்தில் உள்ள மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தனியாக வந்திருக்கிறோம். எந்த அரசியல் பாரம்பரியமும் கிடையாது. உங்களைப் போல எந்த இனிஷியலும் கிடையாது. தனியாள்தான். எப்போது வேண்டுமானாலும் தொட்டுப் பாருங்கள், தயாராக இருக்கிறேன். மானஷ்ட ஈடு நோட்டீஸ் கொடுக்கக்கூட தகுதியில்லாதவர்கள் நீங்கள்.
இன்னும் உங்களுக்கு 6 மணி நேரம் இருக்கிறது. முழு போலீஸ் படையை பயன்படுத்தி, மாலை 6.15 மணி வரை அலுவலகத்தில் இருப்பேன். நீங்கள் என்னை கைது செய்யவில்லை என்றால், நீங்கள் சொல்வதை இந்த தமிழக மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பது இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல் நீங்கள் அவதூறு பரப்புவதை தட்டிக் கேட்டால் குரல்வளையை நெறிப்பீர்கள்.
தமிழக பாஜகவில் எனது பதவிக்காலம் முடியும் வரை ஆயிரம் மான நஷ்டஈடு வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன். இதற்காக இந்த விவசாயி அண்ணாமலை தொட்டம்பட்டியில் இருந்து கோபாலபுரத்தை எதிர்ப்பதற்காக வந்திருக்கிறேன்" என்று அண்ணாமலை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT