Published : 29 Mar 2022 06:04 AM
Last Updated : 29 Mar 2022 06:04 AM
சென்னை: திமுகவின் ‘கலைஞர் அறிவாலயம்’ கட்டிடத்தை திறப்பதற்காக நாளைடெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 31-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கிறார்.
கடந்த 2006-ம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்பிக்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம்ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி திமுகவுக்கு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயாமார்க் பகுதியில், பாஜக அலு வலகம் அருகில் 2013-ம் ஆண்டு நிலம் வழங்கப்பட்டது.
இந்த நிலத்தில் திமுக அலுவலகமான ‘கலைஞர் அறிவாலயம்’ கட்டும் பணிகள் நடைபெற்று வந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூன்மாதம் டெல்லி சென்ற முதல்வர்ஸ்டாலின், கட்டுமானப் பணிகளைவிரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதன்படி பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தன. அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் கட்டிடத்தைத் திறக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், கரோனா பரவல் அதிகரித்ததால் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், வரும் ஏப்.2-ம் தேதி கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக முதல்வர் நாளை (மார்ச் 30) மாலை டெல்லி செல்கிறார். அதைத் தொடர்ந்து 31-ம் தேதி பிற்பகலில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கிறார். அப்போது, நீட் தேர்வு விலக்கு, தமிழகத்துக்கான பேரிடர்நிவாரண நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்த உள்ளார்.
அதன்பின், ஏப்.1-ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். வரும் 2024-ம்ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு புதிய கூட்டணியை உருவாக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முயற்சி எடுத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் புதிய அணியை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் ஒருபகுதியாக இந்தச்சந்திப்பு நிகழும் என கூறப்படுகிறது.
ஏப்.2-ம் தேதி மாலை 5 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.இந்நிகழ்ச்சி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலும், பொருளாளர் டி.ஆர்.பாலுஎம்பி முன்னிலையிலும் நடைபெறுகிறது. மேலும், அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, கருணாநிதியின் சிலைகளையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா,ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, 3-வது முறையாக முதல்வர் டெல்லி செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT