Published : 28 Mar 2022 05:16 PM
Last Updated : 28 Mar 2022 05:16 PM

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் திமுக அரசு இரட்டை வேடம்: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ | கோப்புப் படம்.

மதுரை: தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை பனகல் சாலையில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''மதுரை மாநகராட்சி தேர்தலில் 70 சதவீதம் அதிமுக வெற்றி பெற்று இருக்கும். கடைசி மூன்று நாட்களில் நிலைமை மாறிவிட்டது, இல்லையென்றால், அதிமுக வரலாற்று வெற்றி பெற்று இருக்கும். மாமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் செயல்பாடுகள் கவனிக்கப்படும். சரி இல்லாத பட்சத்தில் மாற்று நிர்வாகி தேர்வு செய்யப்படுவார்கள்.

மாமன்றத்தில் மதுரை மக்களுடைய குரலாக அதிமுக கவுன்சிலர்கள் பிரதிபலிப்பார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. அம்ரூட் திட்டம் மூலம் முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் தற்போது கிடப்பில் உள்ளது. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் அதில் திமுக அமைச்சர்கள் குறைகள் மட்டும் கூறுகின்றனர். அந்தத் திட்டங்களை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் அதிமுக அரசோ, அமைச்சரோ கொண்டு வந்த திட்டம் அல்ல. இந்தத் திட்டத்தில் மத்தியில் இருந்து வரும் நிபுணர்க் குழு ஆய்வு செய்துதான் முடிவு எடுப்பார்கள். தனிநபர் முடிவு எடுக்க முடியாது.

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. கேரள போல வெளிப்படையாக பொது வேலைநிறுத்தம் தமிழகத்தில் அறிவித்திருக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி வெளிநாட்டு பயணம் செய்தபோது கிண்டல் கேலி செய்தார். அப்போது ரூ.36,000 கோடி முதலீடு பெற்றார். இன்று முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் முதலீடு பயணமா? அவருடன் சென்று இருக்கும் நபர்களை பார்த்தால் சுற்றுலா போல தான் தோன்றுகிறது. தமிழன் என்ற முறையில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வேண்டும் முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தில் தமிழகத்தில் முதலீடு ஈர்த்தால் சந்தோஷம்தான்.

பாஜக தலைவர் அண்ணாமலை வளர்ந்து வரும் கட்சியின் இளைய தலைவர். அவர் செயல்பாடுகள் திமுக அரசுக்கு எதிர்ப்பை காட்டும் வகையில் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். அவருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை சொல்லுகிறார். அதற்கு அந்தத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு திமுக வழக்குப் போடுவதாக சொல்லுவது சரியாக இருக்காது'' என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x