Published : 28 Mar 2022 02:39 PM
Last Updated : 28 Mar 2022 02:39 PM
காரைக்கால்: காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் முன்பு கட்டப்பட்டுள்ள முகப்பு மண்டபப் பிரச்சினை தொடர்பாக காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் பாதுகாப்புக் குழுவினர் இன்று புதுச்சேரி முதல்வரை சந்தித்துப் பேசினர்.
காரைக்கால் கைலாசநாதர் கோயில் வகையறாவைச் சேர்ந்த, பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் கோபுர வாயில் பகுதியில் சுமார் ரூ.25 லட்சம் செலவில் முகப்பு மண்டபம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், அரசுத் துறைகளின் அனுமதியின்றி பொது இடத்தை ஆக்கிரமித்து இந்த மண்டபம் கட்டப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 18 ம் தேதி நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், கட்டப்பட்டு வரும் முகப்புப் மண்டபத்தை 28ம் தேதிக்குள் இடித்து அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முகப்பு மண்டபத்தை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்ட இந்து அமைப்புகள், பல்வேறு சமுதாய அமைப்புகள் சார்பில் தொடர்ந்து பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முகப்பு மண்டபத்தை இடிக்காத வகையில் சட்ட ரீதியாகவும், அரசு ரீதியாகவும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலய பாதுகாப்புக் குழுவினர் தலைமையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், பல்வேறு சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தோர், திருப்பணிக் குழுவினர், கைலாசநாதர் மற்றும் நித்தியகல்யாணப் பெருமாள் தேவஸ்தான அறங்காவல் வாரிய நிர்வாகிகள், அமைச்சர் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாக தியாகராஜன், வெங்கடேசன், சிவசங்கர் உள்ளிட்ட சுமார் 100 பேர் இன்று புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்பு குறித்து புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் எம்.அருள்முருகன் கூறியது: ''கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்கக் கூடாது. மண்டபத்தை பாதுகாக்க அரசு, நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தினோம். உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒரு வார காலம் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நாங்களும் வழக்கு தொடர்பாக சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். முகப்பு மண்டபத்தை பாதுகாக்கும் வகையில் அரசு சார்பில் நீதிமன்றத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல்வரும் உறுதியளித்துள்ளார்” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...