Published : 04 Apr 2016 08:16 AM
Last Updated : 04 Apr 2016 08:16 AM
ஜாதி ஆணவத்தால் கொலை செய்யப்பட்ட தனது கணவரின் பெயரில் விரைவில் புதிய அறக்கட்டளை தொடங்கி, காதல் திருமணம் புரிவோரை பாதுகாக்க இருப்பதாக கவுசல்யா தெரிவித்துள்ளார்.
கலப்புத் திருமணம் செய்து கொண்ட குமரலிங்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சங்கர், உடுமலை பேருந்து நிலையம் அருகே பட்டப் பகலில் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். தாக்குதலுக் குள்ளான அவரது மனைவி கவுசல்யா, தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமாகியுள்ளார்.
சங்கரின் 16-ம் நாள் நிகழ்ச்சிக் காக கோவை அரசு மருத்து வமனையில் இருந்து திரும்பிய கவுசல்யா, குமரலிங்கத்தில் உள்ள தனது கணவரின் இல்லத்தில் வசித்து வருகிறார். அவரை பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
கவுசல்யா ’தி இந்து’-விடம் கூறியதாவது:
பாதியில் நிறுத்தப்பட்ட கல்லூரிப் படிப்பை மீண்டும் தொடர வேண்டும் என்பது எனது விருப்பம். ஜாதி வெறியால் கொல்லப் பட்ட சங்கரின் நினைவாக விரைவில் ஒரு அறக்கட்டளை தொடங்கி, ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்வோருக்கு ஆதரவளிக்கப்படும். காதல் திருமணம் செய்வோர் மீது நடைபெறும் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும். ஜாதிகள் இல்லாத சமுதாயம் மலர வேண்டும். இதுவே அறக்கட்டளையின் நோக்கமாக இருக்கும்.
பிசிஏ படிக்க விரும்புகிறேன். சங்கரை கொலை செய்தோருக்கு அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவ ளிக்கும் வகையில் எனது எதிர் கால நடவடிக்கைகள் இருக்கும். பள்ளி, கல்லூரிகளில் ஜாதி பார்க்காமல் இருக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு கவுசல்யா தெரிவித்தார்.
அப்போது, சங்கரின் தந்தை வேலுச்சாமி, சகோதரர் விக்னேஸ்வரன் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT