Published : 27 Mar 2022 06:42 PM
Last Updated : 27 Mar 2022 06:42 PM
ஒட்டன்சத்திரம்: தமிழகம் முழுவதும் 5,000 நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றைப் பிரித்து புதிய கடைகளை அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். ப.வேலுச்சாமி எம்.பி., திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன் வரவேற்றார்.
5000 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்படும்: பயனாளிகளுக்கு நகைகடன் தள்ளுபடி சான்றிதழ், நகைகள் மற்றும் பல்வேறு கடனுதவிகள், புதிய குடும்ப அட்டைகளை வழங்கிய அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது: ''தமிழகத்தில் இதுவரை 11 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 36,000 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தமிழகம் முழுவதும் 5,000 நியாயவிலைக் கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கடைகளை பிரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ.208 கோடி மதிப்பிலான நகை கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 54,600 பேர் பயனடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும் ரூ.20 கோடி மதிப்பிலான கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
நிகழ்ச்சியில் 1,977 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் பயன்: மேலும், நத்தம் தொகுதிக்குட்பட்ட நொச்சி ஓடைப்பட்டியில் இன்று நகை கடன் தள்ளுபடிக்கான விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நகைகளை வழங்கி அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், ''வாக்களித்த மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்க தவறிவிட்டோம் என வருத்தப்படும் அளவிற்கு திமுக ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்தார் அதன்படி, தமிழகத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நத்தம் தொகுதியில் கல்லூரி, குளிர்பதனக் கிட்டங்கி அமைத்துத் தரப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT