Published : 27 Mar 2022 04:52 PM
Last Updated : 27 Mar 2022 04:52 PM
பெரம்பலூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன் பக்கம் கவனத்தை ஈர்ப்பதற்காகவே தமிழக முதல்வர் குறித்து விமர்சித்து வருகிறார். அவருக்கு கவன ஈர்ப்பு ஃபோபியா வந்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பி.யுமான தொல் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "பொதுத்துறைகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன. லாபத்தில் இயங்கக்கூடிய நிறுவனங்களைக்கூட மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைத்து வருகிறது. இந்தப் போக்கை கண்டிக்கிற வகையில், இந்த பொதுவேலை நிறுத்தம் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில், அகில இந்திய அளவில் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் தொழிற்சங்க அமைப்புகளும், அரசு ஊழியர் அமைப்புகளும் பங்கேற்கின்றன. பொதுமக்கள் இந்தப் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றியடைய வேண்டும். அது தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கே நல்ல ஒரு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் . தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு இடத்திலும் பேசும்போது தன்னை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசி வருகிறார்.
அவருக்கு கவன ஈர்ப்பு ஃபோபியா வந்துள்ளது. தன் பக்கம் கவனத்தை ஈர்ப்பதற்காகவே முதல்வர் குறித்து அண்ணாமலை விமர்சித்து வருகிறார்" என்றார்.
பேட்டியின்போது மண்டல செயலாளர் கிட்டு, மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT