Published : 27 Mar 2022 11:56 AM
Last Updated : 27 Mar 2022 11:56 AM
சென்னை: "அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல், வழக்கு தொடுப்போம் என்று மிரட்டுவது வேடிக்கையாக உள்ளது. இந்த மிரட்டல்களுக்குகெல்லாம் பாஜக அஞ்சாது. நடப்பது திமுக ஆட்சி என்ற ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு எங்களின் ஒரே பதில் 'நடப்பது பாஜக ஆட்சி' என்பதே" என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள கருத்துகள் முதல்வரின் மதிப்பையும், மரியாதையையும் குலைக்கின்ற வகையில் பேசப்பட்ட அவதூறு கருத்துகள் என்பதோடு, அந்நிய முதலீட்டை இந்தியாவிற்கு கொண்டு வரும் முதல்வரின் முயற்சியை சீர்குலைக்கும் தேச விரோதப் பேச்சு என்பதால், தேச துரோக குற்றச்சாட்டில் கையாள வேண்டிய நடவடிக்கையும் கூட" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
எது தேச விரோதப் பேச்சு? திராவிட நாடு கோரிக்கையை வரவேற்பதாக மார்ச் 2018-ல் திமுக தலைவர் ஸ்டாலின் பிரிவினைவாதம் பேசியது தேச விரோத பேச்சு இல்லையா? பாதுகாப்பு கண்காட்சியை அர்ப்பணிக்க தமிழகம் வந்த பிரதமரை 'கோ பேக் மோடி' என்றும் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது தேச துரோகம் இல்லையா? நாற்பதற்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்ற நிலையில், அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது தேச விரோதம் இல்லையா? அவ்வாறு செய்தது தேச துரோகம் இல்லையா?
நல்லுறவை ஏற்படுத்தி அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்து வளர்ச்சி பாதைக்கு இந்தியாவை அழைத்து சென்று கொண்டிருக்கிற பிரதமரை "வெளிநாடு வாழ் பிரதமராக இருக்கிறார், ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார்" என்று 2019-ம் ஆண்டு கூறியது தேச துரோகம் என்றும் தேச விரோதம் என்றும் ஒப்புக் கொள்கிறாரா ஸ்டாலின்?
மோடி வெளிநாட்டுக்கு செல்கிறாரே? அது அவர் சொந்த பணமா? மக்களுடைய வரிப்பணம் என்பதை தயவு செய்து மறந்துவிடக்கூடாது என்று சொன்ன ஸ்டாலின் துபாய்க்கு செல்வது அரசு முறை பயணம் என்று சொல்கிறாரே? அது அவர் சொந்த பணமா? மக்களுடைய வரிப்பணத்தில் தானே செல்கிறார் என்பதை மறந்து விட்டாரா?
அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல், வழக்கு தொடுப்போம் என்று மிரட்டுவது வேடிக்கையாக உள்ளது. இந்த மிரட்டல்களுக்குகெல்லாம் பாஜக அஞ்சாது. நடப்பது திமுக ஆட்சி என்ற ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு எங்களின் ஒரே பதில் 'நடப்பது பாஜக ஆட்சி' என்பதே" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...