Published : 27 Mar 2022 05:28 AM
Last Updated : 27 Mar 2022 05:28 AM
காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர்,கடலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 26-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது. சென்னை ஆலந்தூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் எஸ்.மனீஷ், சிம்ரன்ஜீத் காஹ்லோன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், மாநகர மருத்துவ அலுவலர் ஹேமலதா ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை நடந்த 25 முகாம்களில் 3.90 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 50.61 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.35 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போடாமல் உள்ளனர். 12-14 வயது சிறுவர்கள் 10.92 லட்சம்(51.48%) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல, 15-18 வயதுள்ள 28.59 லட்சம் (85.44%) பேருக்கு முதல் தவணையும், 20.31லட்சம் (60.90%) பேருக்கு 2-வது தவணையும் போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 92.1% பேர்முதல் தவணையும், 75.49% பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை 18 வயதை கடந்த99% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 81% பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். 3,240 ஊராட்சிகள், 27 நகராட்சிகளில் முதல் தவணை தடுப்பூசி 100%போடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கடலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் முதல்தவணை தடுப்பூசி 100% செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. தகுதியான 16.19 லட்சம் பேரில்,இதுவரை 7.52 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஜூனில் 4-வது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதில் இருந்து விடுபட, தடுப்பூசி ஒன்றேதீர்வு. எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT