Published : 27 Mar 2022 04:00 AM
Last Updated : 27 Mar 2022 04:00 AM
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் (பொம்மிடி) பேரூராட்சியில் பல திருப்பங்களுக்குப் பின்னர் நேற்று விசிக வார்டு உறுப்பினர் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டத்தில் பொ.மல்லாபுரம் உட்பட 10 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் 9 பேரூராட்சிகளின் தலைவர் பொறுப்புக்கு திமுக சார்பில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களை கட்சித் தலைமை வேட்பாளர்களாக அறிவித்தது. பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை மட்டும் கூட்டணி கட்சியான விசிக-வுக்கு திமுக தலைமை ஒதுக்கியது.
பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுக்க கடந்த 4ம் தேதி நடந்தது. இந்நிலையில், திமுக தலைமையின் அறிவிப்பையும் மீறி தருமபுரி மாவட்ட திமுக நிர்வாகிகள் செயல்பட்டு பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற சாந்தியை தேர்வு செய்ய முயற்சிகள் மேற்கொண்டனர். இதையறிந்த விசி கட்சியினர் அன்று பொம்மிடியில் சாலை மறியல், கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டனர்.
பெரும் பரபரப்பான சூழல் நிலவியபோதும் 15 வார்டுகளைக் கொண்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சியின் தலைவராக 8 வாக்குகள் பெற்று திமுக-வின் சாந்தி தேர்வு செய்யப்பட்டார். விசிக சார்பில் போட்டியிட்ட சின்னவேடி 7 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய பதவிகளை திமுக-வினரே கைப்பற்றிய சம்பவங்கள் இவ்வாறு தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக நடந்தது. இதையறிந்த திமுக தலைமை, இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை எச்சரித்ததுடன், பதவியில் இருந்து விலகி கூட்டணி கட்சியினருக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின்னரும் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவராக தேர்வான சாந்தி பதவி விலகாமலேயே இருந்து வந்தார். தலைமை அறிவிப்புக்கு பின்னரும் பதவி விலகாதவர்களை கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கியது.
இதற்கிடையில், திமுக தலைமை விசிக நிர்வாகிகளை சமா தானப்படுத்தி, பொ.மல்லாபுரம் பேரூராட்சியின் துணைத் தலைவர் பதவியை ஏற்குமாறு அறிவித்தது. இதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஏற்கெனவே விசிக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சின்னவேடி துணை தலைவர் வேட்பாளர் ஆக்கப்பட்டார். நேற்று மறைமுக தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் சின்னவேடி, துணைத் தலைவர் பதவியை ஏற்கக் கூடாது என அவரது மகன் மருதுபாண்டி, மகள் மற்றும் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட நேரம் சமாதான முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்க வில்லை.
எனவே, விசிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, 2-வது வார்டில் விசிக சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஸ்ரீதா துணைத் தலைவர் வேட்பாளர் ஆக்கப்பட்டார். மேலும், அவர் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சின்னவேடி குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் துணைத் தலைவர் பதவியை விசிக மொத்தமாக நிராகரித்தால் திமுக சார்பில் வென்ற வார்டு உறுப்பினர் ஒருவரை துணைத் தலைவர் பதவியில் அமர வைக்க நேற்றும் திமுக தரப்பினர் அதீத ஆர்வம் காட்டினர். இருப்பினும் இறுதி நேரத்தில் தா வேட்பாளராக்கப்பட்டு துணைத் தலைவர் ஆகியுள்ளார்.
இவ்வாறு பல திருப்பங்களுக்கு பின்னர் பொ.மல்லாபுரம் பேரூராட்சியின் துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலை ஒட்டி நேற்று அப்பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT