Published : 27 Mar 2022 04:15 AM
Last Updated : 27 Mar 2022 04:15 AM
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர்மன்றத் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் 2-வது முறையாக நேற்று ஒத்திவைக்கப்பட்டது.
மணப்பாறையில் அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 53 ஆண்டுகளுக்கு பிறகு நகர்மன்றத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. நகர்மன்றத் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெற்றது. இதனை திமுக உறுப்பினர்கள் புறக்கணித்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அதிமுகவைச் சேர்ந்த 11 உறுப்பினர்களில் நகர்மன்றத் தலைவர் உட்பட 10 பேர் மட்டும் வந்திருந்தனர். போதிய உறுப்பினர்கள் வருகை இல்லாததால் வேட்பு மனுவை பெற்றுக் கொள்ள அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்றனர்.
கூத்தைபார் பேரூராட்சி
கூத்தைபார் பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவி திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பழனியாண்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக வேண்டும் என திமுக தலைமை அறிவித்ததைத் தொடர்ந்து தனது பதவியை பழனியாண்டி ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில் தலைவர் செல்வராஜ் உட்பட 10 பேர் மட்டுமே வந்திருந்தனர். துணைத் தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வைசூர்யாவும், ராஜினாமா செய்திருந்த பழனியாண்டியும் போட்டியிட்டனர். போதிய கவுன்சிலர்கள் வருகை தராததால் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.
தொட்டியம் பேரூராட்சி
தொட்டியம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ராஜேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக தலைமை அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, ராஜேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவரைத் தவிர திமுக கவுன்சிலர்கள் 9 பேர் பங்கேற்கவில்லை. அதிமுகவைச் சேர்ந்த 3 கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் வந்திருந்தனர்.
கூட்டத்தில் போதிய உறுப்பினர்கள் வருகை தராததால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் காளிமுத்தன், தேர்தல் பார்வையாளர் மாதவன், செயல் அலுவலர் சண்முகம் ஆகியோர் அறிவித்தனர்.
அரியலூர் நகராட்சி
அரியலூர் நகராட்சி துணைத்தலைவருக்கான தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக, அதிமுக தலா 7 வார்டுகளில் வெற்றிப்பெற்ற நிலையில், 3 சுயேச்சை கவுன்சிலர்கள் திமுகவுக்கு ஆதரவளித்துள்ளனர். அண்மையில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் திமுகவில் இணைந்ததால், திமுக வசம் 11 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர், மதிமுக கவுன்சிலர் ஒருவர் என 7 பேர் மட்டுமே தேர்தலுக்கு வாக்களிக்க வருகை தந்திருந்தனர். இதனால், துணைத் தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஆறுமுகம் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT