Published : 27 Mar 2022 04:00 AM
Last Updated : 27 Mar 2022 04:00 AM
நான் இருக்கும் வரை காட்பாடி தொகுதியில் நான் தான் நிற்பேன், நான் தான் ஜெயிப்பேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.
தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட நகைக்கடன்தள்ளுபடி திட்டத்தில் பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி அளித்து சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழை வழங்கிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘நான் இருக்கும் வரை காட்பாடி தொகுதிக்கு ஏதாவது செய்துகொண்டே இருப்பேன். கிராமப்புறங்களில் இருந்து மாணவர்கள் வேலூரில் உள்ள கல்லூரிகளுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்க வள்ளிமலையில் விரைவில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும்.
பொன்னையில் விரைவில் அரசு மருத்துவமனை, விளையாட்டு மைதானம் கொண்டு வரப்படும். இந்த காட்பாடி தொகுதியில் எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன். வேலை கிடைப்பதற்காக காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 100 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
காட்பாடி தொகுதியின் கடைகோடி வரை காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படும். காட்பாடி டெல் தொழிற்சாலையை மூடிவிட்டார்கள். அதை விற்கவும் பார்த்தார்கள். அங்கு புதிய தொழிற்சாலை இந்தாண்டு தொடங்கப்படும். குகையநல்லூர் பக்கத்தில் பொன்னையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அங்கிருந்து தண்ணீரை எடுத்து விநியோகிக்க ரூ.18 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
பாலாற்றில் ஓடும் தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்டப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 4 புதிய தடுப்பணை கட்டப்பட உள்ளது. இவ்வளவு பவர்புல் அமைச்சராக இருந்தும் எதையும் செய்யாவிட்டால் பின்நோக்கி சென்று விடும். இவ்வளவு செய்துவிட்டு போய்விடுவேன் என நினைக் காதீர்கள். நான் இருக்கும்வரை காட்பாடி எனது தொகுதி. என்னை53 வருஷம் சட்டப்பேரவையில் என்னை உட்கார வைத்திருக் கிறீர்கள். இதற்கு இந்த தொகுதி மக்கள்தான் காரணம். காட்பாடியில் நான் தான் நிற்பேன், நான் தான் ஜெயிப்பேன்.
வேலூர் மாவட்டத்தில் மட்டும் 28,153 பேர் நகைக்கடன் 90 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். வட்டியுடன் சேர்த்தால் ரூ.150 கோடி வர வேண்டி இருக்கிறது. இதில், தகுதியுள்ளவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
1960-61 காலகட்டத்தில் நான் கோபாலபுரம் வீட்டுக்கு சென்றபோது டவுசர் அணிந்து சுற்றிக்கொண்டிருந்த குழந்தை ஸ்டாலின் இன்று என் தோளுக்கு மேல் வளர்ந்து என் தலைக்கு மேல் உயர்ந்து தலைவராக வளர்ந்து நிற்கிறார். நான் அவர் மீது போட்ட கணக்கை தப்பு என நிரூபித்தி உழைத்து வருகிறார். தமிழகம் ஸ்டாலின் ஆட்சியில்தான் சுபிட்சமாக இருக்கப்போகிறது’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காட்பாடி எனது தொகுதி. என்னை 53 வருஷம் சட்டப்பேரவையில் என்னை உட்கார வைத்திருக்கிறீர்கள். இதற்கு இந்த தொகுதி மக்கள்தான் காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT