Published : 26 Mar 2022 08:49 PM
Last Updated : 26 Mar 2022 08:49 PM
புதுடெல்லி: தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள விசாகா என்ற தனியார் பள்ளியுடன் இணைந்து சைனிக் பள்ளி திறப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு சாரா நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், மாநில அரசுகளுடன் இணைந்து கூட்டு முயற்சியில் நடப்புக் கல்வியாண்டில் நாடு முழுவதும் 21 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்குவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள விகாசா என்ற தனியார் பள்ளியுடன் இணைந்து சைனிக் பள்ளியை திறப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் 100 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்குவது என்ற அரசின் முன்னெடுப்பின் கீழ் முதற்கட்ட நடவடிக்கையாக இப்பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. தற்போது இருக்கும் சைனிக் பள்ளிகளில் இருந்து புதிய பள்ளிகள் மாறுபட்டதாக இருக்கும். தேசிய கல்விக் கொள்கையுடன் ராணுவத்தில் சேர்வது உட்பட சிறந்த வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், தரமான கல்வியை அளிக்க 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இந்தப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளது.
இதன்மூலம், தனியார் துறையும் அரசுடன் இணைந்து நாட்டை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இன்றைய இளைஞர்களை நாளை பொறுப்புமிக்க குடிமக்களாக திகழச் செய்ய முடியும். அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு 12 புதிய பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆறு தனியார் பள்ளிகளிலும், 3 மாநில அரசு பள்ளிகளிலும் சைனிக் பள்ளிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சைனிக் பள்ளியில் உள்ளது போல், அனைத்து பள்ளிகளும் உண்டு - உறைவிட பள்ளிகளாக இருக்காது. மொத்தமுள்ள 21 புதிய சைனிக் பள்ளிகளில் 7 பள்ளிகள் வழக்கமான பள்ளிகளாகவும், 14 பள்ளிகள் உண்டு-உறைவிட பள்ளிகளாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT