Published : 26 Mar 2022 08:31 PM
Last Updated : 26 Mar 2022 08:31 PM
மதுரை: திருமங்கலம் சுங்கச் சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தானில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு, நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்தார். அப்போது, ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: "ரஷ்யா-உக்ரைன் போரால் அங்கு படித்த இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தீவிர முயற்சியால் 1,890 தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புயுள்ளனர்.
உக்ரைனில் குறைந்த செலவில் மருத்துவப் படிப்பை முடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவர்களுக்கு அங்கு போர் மூண்டது இடியாய் விழுந்தது. கல்விக் கடன் மூலமாகவும், சொந்த பணத்தை செலவிட்டும் எப்படியாவது தங்களது பிள்ளைகள் மருத்துவராக வருவார்கள் என்ற கனவில் இருந்த பெற்றோர்களின் எண்ணங்கள் சிதறிவிட்டன.
முதல் 4 ஆண்டு படித்த மாணவர்களை விட, படிப்பை இறுதி செய்யக் கூடிய நிலையில் இருக்கும் 5 மற்றும் 6-வது ஆண்டு மாணவர்கள் தான் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளனர். கரோனா தொற்று பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்ததை விட போர் முனையில் இருந்து தப்பித்து வந்ததையே இம்மாணவர்கள் பெரிதாக கருதுகிறார்கள். உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு கொடுக்கின்ற வகையில் அவர்களது படிப்பு பாதிக்கப்படாதவாறு, மாணவர்கள் தொடர்ந்து படிப்பதற்கு மத்திய, மாநில அரசு முயற்சி செய்யவேண்டும்.
நாடு முழுவதும் 60 கி.மீ தூரத்திற்குள் இருக்கும் சுங்கச்சாவடியை அகற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மாநில அரசிடம் பட்டியலை கேட்டுள்ளார். திருமங்கலத்தில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற பல்வேறு முயற்சிகளை அதிமுக அரசு மேற்கொண்டது. அதில் உள்ளுர் மக்களுக்கும், தொழில் பேட்டையில் பணிபுரிபவர்களுக்கும் கட்டணமில்லா பாஸ் வழங்கபட்டது. தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து பேச ஏற்கனவே சட்டப்பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆகவே சுங்கச்சாவடியை அகற்ற மத்திய அரசுக்கு அனுப்பும் பட்டியலில் திருமங்கலம் சுங்கச்சாவடியையும் சேர்க்க வேண்டும். இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், மாவட்ட பொருளாளர் திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT