Published : 26 Mar 2022 08:16 PM
Last Updated : 26 Mar 2022 08:16 PM
புதுச்சேரி: பெண்களுக்கான மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் உத்தர பிரதேசத்தில் கொண்டு சென்றதுபோல் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றுவது அவசியம் என்று தேசிய மகளிர் அணித்தலைவி வானதி சீனிவாசன் மாநில மகளிர் அணி தலைவிகளிடம் அறிவுறுத்தினார்.
பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து மாநிலங்களின் மகளிர் அணி தலைவிகளும் தேசிய மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்துகொண்ட கூட்டம் புதுச்சேரியில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பேசுகையில், "நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மூலம் நாடு முழுவதும் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதும், கட்சி வேட்பாளர்களுக்கு பெண்களின் ஆதரவும் தெளிவாகிறது.
குறிப்பாக உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் பாஜக மீது பெண்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கான மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம். குறிப்பாக கழிவறை கட்டுதல், எரிவாயு இணைப்பு வழங்குதல் போன்ற திட்டங்கள் வாக்காளர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச பிரச்சாரத்தை மாதிரியாகக்கொண்டு அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றுவது அவசியம்." என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மாநில மகளிர் அணி தலைவிகளிடம் பேசினார். பின்னர் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மேற்கு வங்க வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில் மகளிர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதை அம்மாநில பெண் முதல்வர் தடுக்கத்தவறிவிட்டார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அதேபோல், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானிலும் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதால் இம்மாநிலங்களில் பாஜக மகளிர் அணி போராட்டங்களை அதிகரிக்கும். ஆறுவயதுக்குள் உள்ள குழந்தைக்கும், தாய்க்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT