Published : 26 Mar 2022 07:14 PM
Last Updated : 26 Mar 2022 07:14 PM
மதுரை: ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரியின் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 4 ம் தேதி முதல் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வைத்துத் தொடங்குகிறது.
மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தற்போது வரை அதற்கான பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டதோடு நிற்கிறது. மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த திட்டத்திற்கு கடன் வழங்கும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம், தற்போது வரை நிதி ஒதுக்கவில்லை.
மதுரையுடன் இணைந்து அறிவிக்கப்பட்ட மற்ற மாநில ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கான கட்டுமானப்பணி தொடங்கிவிட்டன. சில மாநிலங்களில் மருத்துவமனையும், கல்லூரியும் செயல்பட தொடங்கிவிட்டன. அதனால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவனையையும், அதன் மருத்துவக்கல்லூரி வகுப்புகளையும் குறைந்தப்பட்சம் தற்காலிக கட்டிடங்களிலாவது தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததால் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு முதல் நடத்தப்படவுள்ளது. முன்னதாக, மருத்துவப்படிப்புக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டபோது, முதற்கட்டமாக 50 ‘சீட்’கள் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டன.
தற்போது அந்த மாணவர்களுக்கான அட்மிஷன்கள் நிறைவடைந்து வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மதுரை ‘எய்ம்ஸ் ’மருத்துவ மாணவர்களுக்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்க இருக்கிறது.
இதுகுறித்து மதுரை ‘எய்ம்ஸ்’க்கான வழிகாட்டி நிறுவனமானது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மாணவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 'மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருப்பதற்கு வாழ்த்துக்கள். மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் ஏப்ரல் 4ம் தேதி தொடங்குகிறது. மாணவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து வகுப்புகளில் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர்கள், சாதாரண உடைகள் அணிந்து கல்லூரிக்கு வர வேண்டும்.
டி-சர்ட், ஜீன்ஸ், விருந்து ஆடைகள் (Party-wear),ஸ்போட்ஸ் ஷூ உள்ளிட்டவைகள் அனுமதிக்கப்படாது. கரோனா தொற்று பரவாமல் தடுக்க மாணவர்கள் சர்ஜிகல் மாஸ்க் அல்லது என்-95 மாஸ்க் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...