Last Updated : 26 Mar, 2022 03:00 PM

 

Published : 26 Mar 2022 03:00 PM
Last Updated : 26 Mar 2022 03:00 PM

மேகதாது விவகாரம் | பாஜகவிடம் புதுவை அரசு சரணாகதி அடைந்துவிட்டதா? - நாராயணசாமி

படம்: எம். சாம்ராஜ்

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து ஓராண்டுக்குப் பிறகு ஊழல் பட்டியல் வெளியிட உள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார். மேகதாது விவகாரம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: "கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியுள்னர். தமிழக அரசு இதைக் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், புதுவை அரசு இதை வேடிக்கை பார்த்து வருகிறது.

வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் மேகதாதுவில் அணைகட்டுவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மத்திய, கர்நாடக பாஜக அரசிடம் புதுவை அரசு சரணாகதி அடைந்ததாக கருதப்படும்.

ரங்கசாமி தலைமையில் அரசு அமையும்போதெல்லாம் புதுவையில் ரவுடிகள் அட்டகாசம் தொடங்கிவிடும். இப்போதும் போலி பத்திரம் தயாரித்து வீடு, நிலம் அபகரிப்பது சர்வசாதாரணமாக மாறியுள்ளது. குண்டுகள் வீசப்படுகிறது. முதல்வர் அலுவலகம் முதல் அனைத்து அலுவலகங்களிலும் புரோக்கர்கள் பேரம் பேசுகின்றனர்.

பொதுப்பணித்துறையில் பணிகளுக்கு கமிஷன் பெறப்படுகிறது. இந்த அரசு ஊழலில் திளைத்துள்ளது. பள்ளி, கோயில்களுக்கு அருகில் மதுபானக் கடை அமைக்க ரூ.10 லட்சம் பேரம் பேசப்படுகிறது. இவற்றை எடுத்துக் கூறினால் நாராயணசாமி சொத்து கணக்கை காட்டுவாரா என கேள்வி எழுப்புகின்றனர். நான் ஏற்கெனவே தேர்தலில் போட்டியிடும்போது என் சொத்துக்கணக்கை தேர்தல் துறையில் சமர்பித்துள்ளேன். வருமான வரித்துறையில் வரி கட்டுகிறேன். எனவே, சொத்துக் கணக்கை யார் வேண்டுமானாலும் பெற முடியும். என் சொத்து அதிகரித்துள்ளதா என தெரிந்துகொள்ளலாம். இதுபோல பல மிரட்டல்களை சந்தித்துள்ளோம்.

என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு பிறகு ஊழல் பட்டியலை வெளியிடுவோம்" என்று குறிப்பிட்டார். அப்போது காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x